2013-03-13 16:23:58

தேவநிந்தனை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குழுக்களை அடக்க, பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்


மார்ச்,13,2013. தேவநிந்தனை என்ற கொடுமையான சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் குழுக்களை அடக்க, பாகிஸ்தான் அரசு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் ஆயர்கள் பேரவையின் நீதி அமைதிப் பணிக்குழு விண்ணப்பித்துள்ளது.
தேவநிந்தனை புரிந்தனர் என்ற பொய் குற்றம் சுமத்தி, கடந்த வாரம் லாகூரில் 178 கிறிஸ்தவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி, அமைதிப் பணிக்குழு இந்த விண்ணப்பத்தை வெளியிட்டுள்ளதாக பணிக்குழுவின் இயக்குனர் அருள் பணியாளர் Emmanuel Yousaf கூறினார்.
2009ம் ஆண்டு Gojra எனுமிடத்தில் தேவநிந்தனை சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆறு கிறிஸ்தவர்கள் எரித்து கொல்லப்பட்டதையும், 140 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டதையும் தொடர்ந்து, நீதி மன்றங்கள் கூறிய பரிந்துரைகள் இன்னும் செயலாக்கப்படவில்லை என்று அருள்தந்தை Yousaf எடுத்துரைத்தார்.
லாகூரின் புனித யோசேப்பு காலனியில் கிறிஸ்தவர்களின் வீடுகள் எரிக்கப்பட்ட வழக்கு இத்திங்களன்று பாகிஸ்தான் உச்சநீதி மன்றத்தில் துவங்கியுள்ளதையடுத்து, இந்த வழக்கு, நேரிய, தெளிவான முறையில் நடத்தப்படவேண்டும் என்று பல மதத் தலைவர்களும், அரசுத் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் நீதி மன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் 80 விழுக்காடு வழக்குகள் தேவநிந்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.