2013-03-13 16:13:38

கான்கிளேவ் அவையில் நிலவும் ஆன்மீகச் சூழலைப்பற்றி அருள்தந்தை Federico Lombardi


மார்ச்,13,2013. இச்செவ்வாயன்று மாலை 7.42 மணிக்கும், இப்புதன் காலை 11.40 மணிக்கும் சிஸ்டின் சிற்றாலயத்திலிருந்து, கறுப்புப் புகை வெளியானபோதும், மக்கள் அதைக் காண ஆயிரக்கணக்கில் காத்திருந்தது அவர்களுக்குள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது என்ற வார்த்தைகளுடன் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi இப்புதன் மதியம் செய்தியாளர்கள் கூட்டத்தை ஆரம்பித்தார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன் கான்கிளேவ் அவை நடைபெற்ற நாட்களில், வத்திக்கானைச் சுற்றி பேருந்துகள் மற்றும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டபோதிலும், மக்கள் நடந்தே வந்து புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியது உரோம் மக்களின் ஈடுபாட்டை உணர்த்துகிறது என்றும் அருள்தந்தை Lombardi சுட்டிக்காட்டினார்.
இப்புதன் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில், கான்கிளேவ் அவையில் நிலவும் ஆன்மீகச் சூழலையும், பங்கேற்கும் கர்தினால்களின் நல்ல உடல் நிலை ஆகியவை குறித்தும் அருள்தந்தை Lombardi விளக்கிக் கூறினார்.
கறுப்பு, வெள்ளை ஆகிய புகைகளை வெளியிடும் புகைப்போக்கிக் கருவியில் பயன்படுத்தப்படும் பல்வேறு வேதிப் பொருள்கள் பற்றியும் எடுத்துரைத்த அருள்தந்தை Lombardi, இந்தப் புகைகள் சிஸ்டின் சிற்றாலயத்திற்குள் நுழையும் வாய்ப்பில்லாததால், அங்குள்ள கர்தினால்களையோ அல்லது அக்கோவிலில் உள்ள புகழ்பெற்ற ஓவியங்களையோ எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
வாக்களிக்கச் செல்லும் ஒவ்வொரு கர்தினாலும் மேற்கொள்ளும் சடங்குகள் குறித்து அண்மையில் வத்திக்கான் வானொலியில் பேட்டியளித்த 80 வயதுக்கும் மேற்பட்ட ஜெர்மன் கர்தினால் Karl Lehmann அவர்கள் விளக்கம் அளித்துள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய அருள்தந்தை Lombardi, கான்கிளேவ் அவை மிகவும் உன்னதமான ஓர் ஆன்மீகச் சூழலில் நடைபெறுவதை கர்தினால் அவர்களின் பேட்டி விளக்குகிறது என்று கூறினார்.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கான்கிளேவ் அவை தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் தொலைக்காட்சி மூலம் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார் என்றும், அவர் கர்தினால்கள் அனைவருடனும், கத்தோலிக்கத் திருஅவையுடனும் இந்த முக்கியமான நேரத்தில் செபத்தில் ஒன்றியுள்ளார் என்றும் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Lombardi.








All the contents on this site are copyrighted ©.