2013-03-12 14:34:17

விவிலியத் தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 5


RealAudioMP3 மார்ச் 12, இச்செவ்வாய் பிற்பகலில் வத்திக்கானிலுள்ள உலகப் புகழ்பெற்ற சிஸ்டின் சிற்றாலயத்தில் 115 கர்தினால்கள் 'கான்கிளேவ்' அவையைத் துவக்கியுள்ளனர். சிஸ்டின் சிற்றாலயத்தில் நுழைந்ததும் நம் கண்களைக் கவர்வது பீடத்திற்குப் பின், மையச் சுவரில் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மிக்கேலாஞ்சலோ அவர்களால் வரையப்பட்டுள்ள இறுதித் தீர்வைக் காட்சி. மத்தேயு 25ம் பிரிவில் 31 முதல் 46 முடிய உள்ள இறைச் சொற்றொடர்களில் விவரிக்கப்பட்டுள்ள இந்தக் காட்சி, 'கான்கிளேவ்' அவையில் பங்கேற்கும் நமது கர்தினால்களின் எண்ணங்களில் பதிந்து, நல்ல முடிவுகளை எடுக்க அவர்களைத் தூண்டும் என்று நம்புகிறோம். புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடியுள்ள 'கான்கிளேவ்' அவை உறுப்பினர்கள் 'இறுதி தீர்வை' காட்சியின் நடுநாயகமாய் தோன்றும் இயேசுகிறிஸ்துவின் நேரடிப் பார்வையின் கீழ் அமர்ந்துள்ளனர் என்பது நமக்கு நம்பிக்கை தரும் ஓர் அடையாளம்.

மத்தேயு நற்செய்தி 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இறுதித் தீர்வையின்போது, 'தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களையும்' (25:34), 'சபிக்கப்பட்டவர்களையும்' (25:41) மானிடமகன் தீர்மானிக்கும் அளவுகோல் - அடுத்தவர் மீது, அதிலும் சிறப்பாக, வாழ்வில் பல நலன்களை இழந்த சிறியோர் மீது நாம் காட்டவேண்டிய பரிவு. தாங்கள் ஆசீர் பெற்றதற்குக் காரணம் கேட்கும் மனிதர்களிடம் மானிட மகன் கூறும் பதில் இதுதான்:
மத்தேயு 25:40
மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
அதேபோல், தாங்கள் சபிக்கப்பட்டதற்கானக் காரணத்தைத் தேடும் மக்களிடம் அவர் கூறும் பதில்:
மத்தேயு 25:45
மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
கிறிஸ்தவப் பாரம்பரியத்தின் ஆணி வேராக விளங்கும் 'அடுத்தவர் மீது அன்பு' என்ற உண்மை 'கான்கிளேவ்' அவை கூடியுள்ள இந்நேரத்தில், சிஸ்டின் சிற்றாலயத்தின் இறுதித் தீர்வை ஓவியத்தின் வழியாக மீண்டும் இவ்வுலகிற்கு நினைவுறுத்தப்படுகிறது.
அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பை, கிறிஸ்தவ வாழ்வின் உயிர் நாடியாக உலகிற்கு உணர்த்திய பெருமை 'நல்ல சமாரியர்' உவமைக்கு உண்டு. இந்த உவமைக் கடலுக்குள் இன்று நாம் முத்தெடுக்க மூழ்குவோம்.

இந்த உவமையை இதுவரை நாம் பல நூறு முறைகள் கேட்டிருப்போம். இருந்தாலும், இன்று மீண்டும் ஒருமுறை இந்த உவமைக்குக் கவனமாக, முழுமையாகச் செவிமடுப்போம். வானொலியில் இந்த உவமை வாசிக்கப்படும்போது, நீங்கள் கண்களை மூடி ஒரு தியான முயற்சியாக இந்த இறைவார்த்தைகளைக் கேளுங்கள். இயேசு கூறிய வார்த்தைகள் உங்கள் மனக்கண்ணில் இந்தக் காட்சியைப் பதிக்கட்டும்.

லூக்கா நற்செய்தி 10:29-35
திருச்சட்ட அறிஞர் ஒருவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’” என்றார்.கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரேஎன்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்என்று கூறினார்.
இன்றைய நம் தேடலில் இயேசு கூறிய இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தைப் பற்றியும், கள்வர் கையில் அகப்பட்ட தனி மனிதர் பற்றியும் நம் தேடல் அமையட்டும்.

அமெரிக்கக் கறுப்பின மக்களின் தலைவராகவும், மிக இளவயதிலேயே (35வயதில்) நொபெல் அமைதிப் பரிசைப் பெற்றவருமான மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் கூறியுள்ள வார்த்தைகள் நம் தேடலுக்கு உதவியாக அமையும். மார்ட்டின் லூத்தர் கிங் 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி அவரது 39வது வயதில் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு முந்தைய நாள், "நான் மலையுச்சிக்குச் சென்றுள்ளேன்" (I've been to the Mountaintop) என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவை ஆற்றினார். அந்த சொற்பொழிவில் 'நல்ல சமாரியர்' உவமையைப் பற்றி தன் எண்ணங்களை அவர் இவ்விதம் பதிவு செய்துள்ளார்:
"நானும் என் மனைவியும் முதல்முறை எருசலேமுக்குச் சென்றபோது, ஒரு வாடகைக் காரில் எருசலேமிலிருந்து எரிகோவுக்குச் சென்றோம். இயேசு தன் உவமையின் நிகழ்விடமாக ஏன் அந்தப் பாதையைத் தெரிவு செய்தார் என்பதை என்னால் அப்போது புரிந்துகொள்ள முடிந்தது. கடல் மட்டத்திலிருந்து, 2500 அடி உயரத்தில் இருக்கும் எருசலேமிலிருந்து கிளம்பும் இந்தப் பாதை, கடல் மட்டத்திற்கு 850 அடி அளவு கீழ் இருக்கும் எரிகோவை அடைகிறது. வளைந்து நெளிந்து செல்லும் பாதை அது. பாதையின் இருபுறமும் ஆங்காங்கே பாறைகளும், குகைகளும் உள்ளன. வளைவுகளில் மறைந்திருந்து வழிப்போக்கர்களைத் தாக்குவதற்கு ஏற்ற ஒரு பாதை அது. இயேசு வாழ்ந்த காலத்தில் அப்பாதை 'இரத்தப் பாதை' என்றே அழைக்கப்பட்டது. ஏனெனில், அந்தப் பாதையில் பலர் தாக்கப்பட்டு, இரத்தம் சிந்தியுள்ளனர்."

இயேசு கூறிய உவமைகளில் பொதுவாக இடங்களின் பெயர்களை அவர் குறிப்பிடப்படுவதில்லை; இந்த உவமையிலோ அவர் எருசலேம், எரிகோ என்ற பெயர்களைக் கூறியதும், சூழ இருந்தவர்கள் அந்தச் சூழலைப் புரிந்திருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு பாதை அது.
ஆலயம் அமைந்த நகரம் எருசலேம் என்பதால், அது மிக முக்கியமான, புனிதமான நகரமாகக் கருதப்பட்டது. எரிகோ நகரமோ வர்த்தக நகரமாக இருந்தது. எனவே, ஆன்மீகத்திலிருந்து உலகம் சார்ந்த எண்ணங்களில் மூழ்க நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் பயணத்தையும், அதிலுள்ள ஆபத்துக்களையும் இயேசு இந்த உவமையின் துவக்கத்தில் கூறியிருப்பதாக ஒரு சில விவிலிய விளக்கங்கள் கூறியுள்ளன.

ஏறத்தாழ 30 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாதையில் பெரும் செல்வந்தர்கள் நடமாடுவது கிடையாது. அந்தப் பாதையின் ஆபத்தை உணர்ந்தவர்கள் அவர்கள். எனவே, அந்தப் பாதை சாதாரண, எளிய மக்களால் பயன்படுத்தப்பட்டப் பாதை. அந்த எளியவர்களையும் கொள்ளையடிக்கக் காத்திருந்தனர் கள்வர்கள். வழிப்போக்கர்களிடம் திருடுவதற்கு ஒன்றுமில்லையெனினும், அவர்கள் உடுத்தியிருந்த உடைகளையும் பறித்துக் கொண்டனர் கள்வர்கள். அத்தனை அவலமான நிலை இயேசுவின் காலத்தில் நிலவி வந்தது என்பதையும் இயேசு தன் உவமையின் துவக்கத்தில் உணர்த்துகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஏழைகளிடமும் கொள்ளையடித்து வாழ்பவர்கள் இருக்க முடியுமா என்று நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. இன்றைய உலகில் செல்வந்தர்கள் இன்னும் அதிகமாகச் செல்வம் சேர்ப்பதும், ஏழைகள் தங்களுக்கு உள்ளவை அனைத்தையும் இழப்பதும் நாம் கண்டுவரும் உண்மை. வழிப்பறி கள்வர்களைப் போல் செல்வந்தர்கள் ஏழைகளிடம் நேரடியாகக் கொள்ளை அடிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால், அளவுக்கு மீறிய செல்வம் சேர்த்தல், பிறநாடுகளில் பணம் சேர்த்தல், வரி ஏய்ப்பு, கறுப்புப் பணம் என்ற வழிகளில் செல்வந்தர்களை வளர்த்துவிட்ட நமது அமைப்பு முறைகளால் ஏழைகளுக்குச் சேரவேண்டியவை கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதும் உண்மைதானே! உயரத்திலிருந்து, தாழ்வை நோக்கி அமைந்திருந்த எருசலேம்-எரிகோ பாதையில் தனியே சென்ற மனிதரை இன்றைய வறியோர் அனைவரின் பிரதிநிதியாக நாம் காணலாம். வறியோர் வாழ்வு தொடந்து தாழ்வை நோக்கியே பயணிக்கிறது என்பதை இந்த பிரதிநிதி உணர்த்துகிறார். பயணத்தின்போது அவரிடமிருந்த உடைமைகள் அவரது உடையும், உடல் நலனும் மட்டுமே. அவ்விரண்டுமே கள்வர்களால் பறிக்கப்பட்டன.

மற்றொரு குறிப்பையும் நாம் உணர வேண்டும். இயேசு இந்த உவமையில் மற்ற அனைவருக்கும் அடையாளங்கள் தந்துள்ளார். குரு ஒருவர், லேவியர் ஒருவர், சமாரியர் ஒருவர் என்று இந்த மூவரையும், ஏன்... கள்வரையும் தனிப்பட்ட அடையாளங்களால் கூறிய இயேசு, பயணம் செய்தவரை மட்டும், 'ஒருவர்' என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார். அவர் இஸ்ரயேல் இனத்தவரா, சமாரியரா, அன்னியரா, செல்வந்தரா, ஏழையா, இளையவரா, முதியவரா... என்ற எந்த அடையாளமும் இல்லை. அவரிடம் எஞ்சியிருந்த அடையாளமான அவரது உடை பறிக்கப்பட்டது... ஒருவேளை, கள்வர்களிடம் பட்ட அடிகள் அவரது முக அடையாளங்களையும் நீக்கியிருக்கும்.
இன்றையச் சூழலுடன் இணைத்துச் சொல்லவேண்டுமெனில், எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் பயணம் செய்த ஒருவர் தன் சுய அடையாளங்கள் அனைத்தையும் இழந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் என்ற வார்த்தைகளுடன் இயேசு தன் உவமையைத் துவக்குகிறார். உலக வாழ்வு என்ற பயணத்தில், சுய அடையாளங்கள், சுயமதிப்பு, உடல் நலம் அனைத்தையும் இழந்து நிற்கும் பல கோடி மக்களின் பிரதிநிதியாக அந்த மனிதர் பாதையோரம் அடிபட்டுக் கிடக்கிறார் என்பதை இயேசு நமக்கு உணர்த்துவதுபோல் இந்த உவமை ஆரம்பிக்கிறது. அவருக்கு நேர்ந்தது என்ன? தொடர்வோம் நம் தேடலை.








All the contents on this site are copyrighted ©.