2013-03-12 16:27:02

கான்கிளேவின் திருவழிபாட்டு முறைகள்


மார்ச்,12,2013. புதிய திருத்தந்தை ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் இடம்பெறும் நடைமுறைகள், தனிப்பட்ட ஒருவரின் கருத்தாகவோ அல்லது ஆர்வக் கோளாரினால் திடீரென சொல்லப்பட்டவைகளாகவோ இருக்கவில்லை, ஆனால் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் திருவழிபாட்டுச் சீர்திருத்தங்களுக்குப் பின்னர் ஏற்படுத்தப்பட்ட திருவழிபாட்டு மரபைத் துல்லியமாகப் பின்பற்றுவதாக இருக்கின்றன.
கான்கிளேவின் திருவழிபாட்டுமுறைகள் என்ற நூலில் காணப்படும் இந்நடைமுறைகள் குறித்து விளக்கியுள்ள வத்திக்கான் ஊடகம் ஒன்று இவ்வாறு கூறியுள்ளது.
உரோமன் கத்தோலிக்கத் தலைவரான திருத்தந்தையின் தேர்தலை உள்ளடக்கிய கான்கிளேவின் முக்கியத்துவத்தை இந்நூல் முதலில் கோடிட்டுக் காட்டுவதாகவும், பின்னர், திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் குறித்தும், இவ்வவை தொடங்குவதற்கு முன்னர் இடம்பெறும் "pro eligendo pontifice" என்ற திருப்பலியிலும் இந்நூல் கவனம் செலுத்துகின்றது எனவும் அவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நூலின் இரண்டாவது பிரிவு, கான்கிளேவின் முக்கிய நேரங்கள், கர்தினால்கள் எடுக்கும் உறுதிமொழி, வாக்குப்பதிவு போன்றவை பற்றியும், 5வது பிரிவு புதிய திருத்தந்தையை அறிவிப்பது, அவரின் ஊருக்கும் உலகுக்குமான, ஊர்பி எத் ஓர்பி ஆசிர் போன்றவை பற்றியும் விவரிக்கின்றன எனவும் வத்திக்கான் ஊடகம் கூறியுள்ளது.
இம்முறை புதிய திருத்தந்தையை அறிவிக்கவிருப்பவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான்.







All the contents on this site are copyrighted ©.