2013-03-12 14:34:11

கற்றனைத் தூறும் சிஸ்டின் சிற்றாலயத்திலுள்ள இறுதித் தீர்வை ஓவியம்


உலகப் புகழ்பெற்ற சிஸ்டின் சிற்றாலயத்திலுள்ள பீடத்திற்குப் பின்னணியாக, மையச் சுவரில், இயேசு கிறிஸ்துவின் இறுதித் தீர்வை காட்சி வரையப்பட்டுள்ளது. 48 அடி உயரமும், 44 அடி அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்டமான ஓவியத்தை உலகப் புகழ் கலைஞர் மிக்கேலாஞ்சலோ உருவாக்கினார். சிஸ்டின் சிற்றாலயக் கூரையில் காணப்படும் புகழ்பெற்ற ஓவியங்களை அவர் உருவாக்கியபின்
(1508-1512), 24 ஆண்டுகள் கழித்து, இறுதித் தீர்வை ஓவியத்தை 1536ம் ஆண்டு ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 60. இந்த ஓவியத்தை வடிவமைக்க அவர் ஐந்து ஆண்டுகள் எடுத்தார். வழக்கமாக வானத்தூதர்களின் உருவங்கள் இறக்கைகளுடன் வரையப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஓவியத்தில் உள்ள வானதூதர்கள் யாருக்கும் இறக்கைகள் வரையப்படவில்லை.
இந்த ஓவியம் முடிக்கப்பட்டபோது, இந்த ஓவியத்தில் காணப்பட்ட உருவங்களை மிக்கேலாஞ்சலோ வரைந்திருந்த விதம் பல காரசாரமான விவாதங்களையும், கண்டனங்களையும் எழுப்பின. 1564ம் ஆண்டு, மிக்கேலாஞ்சலோ மரணமடைந்தபின், இந்த ஓவியத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1980ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு முடிய சிஸ்டின் சிற்றாலயத்தின் அனைத்து ஓவியங்களும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது, இறுதித் தீர்வை காட்சியும் மிக்கேலாஞ்சலோ வரைந்தபடியே அமையும்படி, அதன்மேல் வரையப்பட்ட மாற்றங்கள் நீக்கப்பட்டன.
2012ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், சிஸ்டின் சிற்றாலயத்தின் 500ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுக்கு முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமையேற்றார். 2013ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி சிஸ்டின் சிற்றாலயத்தில் புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் 'கான்கிளேவ்' அவை துவங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.