2013-03-11 15:52:01

கற்றனைத்தூறும்..... “திருத்தந்தை” என்ற சொல்லின் வரலாறு


போப் (pope) என்ற சொல், pappas (πάππας) என்ற கிரேக்க சொல்லிலிருந்து பிறந்ததாகும். இலத்தீனில் papa எனப்படும் இச்சொல்லுக்கு, "தந்தை" என்று அர்த்தம். தொடக்ககாலக் கிறிஸ்தவத்தில், குறிப்பாக, கிழக்கில் அனைத்து ஆயர்களும், மூத்த குருக்களும் போப் என்றே அழைக்கப்பட்டனர். அலெக்சாந்திரியாவின் பேராயராகிய எகிப்தின் முதுபெரும் தலைவரே முதலில் போப் என்று அழைக்கப்பட்டார். நற்செய்தியாளர் புனித மாற்கு உருவாக்கிய அலெக்சாந்திரியத் திருஆட்சிப்பீடத்தின் பேராயர் பதவிக்குரிய பெயராக இது இருந்து வந்தது. 3ம் நூற்றாண்டில் கி.பி.232ம் ஆண்டு முதல் கி.பி. 249ம் ஆண்டு வரை அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தலைவராக இருந்த ஹெராகிளேயுஸ் (Heracleus) அவர்களே, முதன்முதலாக தந்தை ஹெராகிளேயுஸ் என அழைக்கப்பட்டார். எனவே காப்டிக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவரே, முதலில் போப் என்று அழைக்கப்பட்டு வந்தார். எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிறிஸ்தவர்கள், காப்டிக் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பின்னர் 6ம் நூற்றாண்டில், கி.பி. 523ம் ஆண்டு முதல் கி.பி.526ம் ஆண்டுவரை பதவியிலிருந்த உரோமன் கத்தோலிக்க ஆயராகிய முதலாம் ஜான்தான், போப், அதாவது தந்தை என்ற அடைமொழியை முதலில் பயன்படுத்தினார். அதன்பின்னர் உரோமன் கத்தோலிக்க ஆயர்கள் தந்தை என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் மேற்கின் முதுபெரும் தலைவர்களாக இருக்கின்றனர். உரோமன் கத்தோலிக்க ஆயர், தூய பேதுருவின் வழிவருபவர் என்ற முறையில், அனைத்து ஆயர்களுக்கும், நம்பிக்கை கொண்டோரின் கூட்டத்திற்கும் இடையே நிலவும் ஒற்றுமையின் நிலையான, காணக்கூடிய ஊற்றாகவும், அடிப்படையாகவும் அமைகிறார்.(Lumen Gentium 23). இவர், Holy Father அதாவது திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். கடவுள் ஒருவரே தூய்மையானவர். இவர் மனித உருவெடுத்து தொடர்ந்து மனிதர்களோடு இருக்க விரும்பி, தமது திருஅவையை உருவாக்கி, அதன் முதல் தலைவராக தமது திருத்தூதர் பேதுருவை நியமித்தார். மனித உருவெடுத்த நம் ஆண்டவர் இயேசு தமது விண்ணரசின் திறவுகோல்களை பேதுருவிடம் அளித்தார். அதோடு மண்ணுலகில் அவரின் பிரதிநிதியாக, ஆளும் தமது அதிகாரத்தையும் பேதுருவிடம் அளித்தார்(மத்.16,18). எனவே, கடவுளின் மண்ணுலகப் பிரதிநிதியாகிய புனித பேதுருவுக்கும் அவரின் வழிவருபவர்களுக்கும் மரியாதை கொடுப்பது கடவுளுக்கே மரியாதை கொடுப்பதாகும். புனித பேதுருவின் வழிவருபவரை Holy Father-திருத்தந்தை என திருஅவை அழைக்கிறது.







All the contents on this site are copyrighted ©.