2013-03-11 15:42:27

இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் 14 இலட்சம் கையெழுத்துக்கள் கையளிப்பு


மார்ச்,11, 2013. இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய விண்ணப்பம் இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன், புதுடெல்லியில் இவ்விண்ணப்பத்தை ஓப்படைத்தார்.
இந்தச் சந்திப்பின்போது தங்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் நாராயணசாமி பொறுமையாக கேட்டுக்கொண்டதாகவும், ஜெனீவாவில் உரிய நேரத்தில் இந்தியா உரிய முடிவை எடுக்கும் என்று அவர்களுக்கு உறுதியளித்ததாகவும் தெரிவித்தார் அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை நிர்வாகி.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 இலட்சம் பேர் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து இரண்டுலட்சம் பேர் இதில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தெரிவித்தார் அனந்தபத்மனாபன்.
இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்னும் தொடர்வதாகத் தெரிவித்த அனந்தபத்மநாபன், இதில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை பதினைந்து இலட்சத்தைத் தாண்டிச் சென்றுள்ளதாகவும் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.