2013-03-09 10:17:41

கான்கிளேவ் அவை மார்ச் 12


மார்ச்,09,2013. கான்கிளேவ் என்ற அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவை, இம்மாதம் 12ம் தேதி, வருகிற செவ்வாயன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் இவ்வெள்ளி மாலை நடைபெற்ற கர்தினால்களின் எட்டாவது பொது அமர்வில் கான்கிளேவ் அவையைத் தொடங்கும் தேதியை கர்தினால்கள் தீர்மானித்துள்ளனர்.
இத்தகவல்களை நிருபர் கூட்டத்தில் அறிவித்த, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, கான்கிளேவ் அவைக்குத் தயாரிப்பாக இடம்பெறும் “pro eligendo Romano Pontifice” என்ற திருப்பலி, வருகிற செவ்வாய் காலையில் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இடம்பெறும் எனவும் கூறினார்.
இந்நாள்களில் விசுவாசிகள் கர்தினால்களுக்காகச் செபிப்பதற்கு உதவியாக “Adopt a Cardinal”என்ற இணையதளம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இதுவரை குறைந்தது 2,20,000 பேர் கையெழுத்திட்டிருப்பதாகவும் இப்பொது அவையில் கர்தினால்களிடம் அறிவிக்கப்பட்டதாக அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்
செவ்வாய் பிற்பகலில், இந்தக் கான்கிளேவ் அவையில் பங்கெடுக்கும் 115 கர்தினால்கள் Pauline சிற்றாலயத்தில்கூடி தியானம் மற்றும் செபத்தில் ஈடுபடுவர். அதன்பின்னர் Regia அறை வழியாக, தூய ஆவியின் பாடல்பாடிச் செபித்துக் கொண்டே சிஸ்டின் சிற்றாலயம் சென்று அவரவர் இருக்கையில் அமர்வர். திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அப்போஸ்தலிக்கச் சட்ட அமைப்பின்படி இரண்டாவது தியானச் சிந்தனைகள் வழங்கப்படும். இதனை அகுஸ்தீன் துறவு சபையைச் சார்ந்த மால்ட்டாவைப் பூர்வீகமாகக் கொண்ட கர்தினால் Prospero Grech வழங்குவார். பின்னர் 115 கர்தினால்களும் ஒவ்வொருவராக உறுதிமொழி எடுப்பர் போன்ற விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.