2013-03-08 15:27:05

பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடுமாறு திருப்பீடம் அழைப்பு


மார்ச்,08,2013. பெண்களும் சிறாரும் பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவது, மனித மாண்பு மற்றும் மனித உரிமைகளைக் கடுமையாய் மீறுவதாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
சிறார் வியாபாரம், சிறார் விபசாரம் மற்றும் ஊடகங்கள்வழி சிறாரைப் பாலியலில் ஈடுபடுத்துவது குறித்து, ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலகங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார்.
பாலியல் பயன்பாடு மற்றும் கட்டாய வேலைக்காக குறைந்தது 136 நாடுகளிலிருந்து வியாபாரம் செய்யப்பட்ட இலட்சக்கணக்கான மக்களை 118 நாடுகளில் காண முடிகின்றது, இவர்களில் ஏறக்குறைய 60 விழுக்காட்டினர் பெண்கள் என்ற ஐ.நா. புள்ளிவிபரங்களையும் சுட்டிக் காட்டினார் பேராயர் தொமாசி.
மேலும், சிறார் உரிமைகள் குறித்தும் இந்த ஐ.நா.கூட்டத்தில் இவ்வியாழனன்று உரையாற்றிய பேராயர் தொமாசி, எய்ட்ஸ் நோயாளிச் சிறாரின் வாழ்வும் மாண்பும் காக்கப்படுவதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.