2013-03-07 16:12:09

முதுபெரும் தலைவர் முதலாம் Mar Louis Raphael Sako தலைவராகப் பொறுப்பேற்பு


மார்ச்,07,2013. ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணங்களைக் கைவிட்டு, இஸ்லாமிய சமுதாயத்துடன் நல்லுறவை வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்ற உருக்கமான அழைப்பை விடுத்தார் ஈராக் கல்தேய ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் முதலாம் Mar Louis Raphael Sako.
கல்தேய ரீதித் தலைவராக அண்மைக்காலம் வரை பணியாற்றிய கர்தினால் மூன்றாம் Emmanuel Delly பணியிலிருந்து ஒய்வு பெற்றதைத் தொடர்ந்து, இவ்வாண்டு சனவரி மாத இறுதியில் உரோம் நகரில் கூடிவந்த 15 கல்தேய ரீதி ஆயர்கள் பேராயர் லூயிஸ் சாகோ அவர்களைத் தெரிவு செய்ததை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சனவரி 31ம் தேதி ஏற்று, அவரைக் கல்தேய ரீதி முதுபெரும் தலைவராக நியமனம் செய்தார்.
இந்த நியமனத்தைத் தொடர்ந்து, இப்புதனன்று பாக்தாத் புனித யோசேப்பு பேராலயத்தில் தலைவராகப் பொறுப்பேற்ற முதுபெரும் தலைவர் லூயிஸ் சாகோ, தன் மறையுரையில் கிறிஸ்தவ மக்களுக்குச் சிறப்பான வேண்டுகோளை முன்வைத்தார்.
முதுபெரும்தலைவர் சாகோவின் தலைமைப் பணி ஏற்பு சடங்கில் ஈராக் பிரதமர் Nouri al Maliki உட்பட பல அரசு அதிகாரிகளும், இஸ்லாமிய மதத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
64 வயது நிறைந்த முதுபெரும் தலைவர் சாகோ, பல ஆண்டுகளாக கிர்குக் பேராயராகப் பணிபுரிந்தவர். கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நல்லுறவை வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக, 2010ம் ஆண்டு Pax Christi அமைப்பினரின் அகில உலக விருது இவருக்கு வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.