2013-03-07 16:01:17

கற்றனைத்தூறும்... காப்டிக் இனத்தவர்


எகிப்தை உரோமானியர்கள் ஆட்சி செய்தபோது, எகிப்தியப் பூர்வீக மக்கள், காப்டிக்ஸ் என அழைக்கப்பட்டனர். ஆயினும், கி.பி.641ம் ஆண்டில் இசுலாமியர் எகிப்தின்மீது படையெடுத்து அதனை ஆக்ரமிக்கத் தொடங்கியதற்குப் பின்னர், எகிப்திலுள்ள கிறிஸ்தவர்கள் மட்டும் காப்டிக்ஸ் என அழைக்கப்பட்டனர். எகிப்தில் 4ம் நூற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டுவரை, கிறிஸ்தவம் பெரிய மதமாக இருந்து வந்தது. இலத்தீனில் Coptus, Cophtus என்று வழக்கத்தில் இருந்த சொல், 17ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் காப்ட்ஸ்(Copts) என அழைக்கப்படலாயிற்று. இம்மக்கள், உரோமையர் ஆட்சிக் காலத்திலிருந்து பேசிவந்த காப்டிக் மொழி, 18ம் நூற்றாண்டிலிருந்து பெரும்பாலும் திருவழிபாடுகளில்மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய கிழக்கில் பெரும்பான்மை கிறிஸ்தவ சமூகமாக இருக்கும் எகிப்திலுள்ள காப்டிக் கிறிஸ்தவர்கள், அப்பகுதியில் பெரும்பான்மையான சிறுபான்மை சமயக் குழுவாகவும் உள்ளனர். இவர்கள் எகிப்தின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 10 விழுக்காடாகும். இவர்களில் பெரும்பான்மையினர் அலெக்ஸ்சாந்திரியாவின் காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்தவர்கள். எஞ்சியுள்ள ஏறக்குறைய 8 இலட்சம் பேர் காப்டிக் கத்தோலிக்க மற்றும் பல்வேறு காப்டிக் பிரிந்த கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்கள். எகிப்திலுள்ள சிறுபான்மை காப்டிக் கிறிஸ்தவர்கள், அந்நாட்டின் இசுலாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களுக்கு அடிக்கடி இலக்காகி வருகின்றனர். காப்டிக் கிறிஸ்தவர்கள் எகிப்து தவிர, சூடான், அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, ஆஸ்திரேலியா, குவைத், லிபியா, பிரிட்டன், பிரான்ஸ், தென்னாப்ரிக்கா போன்ற நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 6வது பொதுச் செயலர் Boutros Boutros-Ghali, உலக அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் Sir Magdi Yacoub, உலகின் முன்னணி பொறியியலாளர்களில் ஒருவரான Hani Azer, உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான Fayez Sarofim போன்றோர் காப்டிக் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.