2013-03-06 15:30:13

டில்லியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்த இளம்பெண்ணுக்கு அகில உலக வீரப்பெண்கள் விருது


மார்ச்,06,2013. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி உயிரிழந்த 23 வயது இளம்பெண், அகில உலக வீரப்பெண்கள் விருதுபெறும் பெண்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8ம் தேதி அகில உலக பெண்கள் நாள் கடைபிடிக்கப்படும் தருணத்தையொட்டி, அமெரிக்க அரசு வழங்கும் இந்த விருதை இவ்வாண்டு அரசுத் தலைவரின் மனைவி Michelle Obama வழங்குவார் என்று அமெரிக்க அரசுச் செயலர் John Kerry இத்திங்களன்று அறிவித்தார்.
உலகெங்கிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 10 பெண்களில் டில்லி இளம்பெண்ணும் ஒருவர். இந்த இளம்பெண் மரணத்தோடு போராடியபோதும், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் காவல்துறையிடம் விவரங்களைத் தெளிவாக வழங்கியது பெண்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்று அமெரிக்க அரசு அறிக்கை கூறுகிறது.
ஆப்கானிஸ்தான், எகிப்து, நைஜீரியா, இரஷ்யா ஆகிய நாடுகள் உட்பட பத்து நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள வீரப் பெண்களுக்கு மார்ச் 8ம் தேதி விருதுகள் வழங்கப்படும்.
2007ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை இதுவரை 45 நாடுகளைச் சேர்ந்த 67 பெண்கள் பெற்றுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.