2013-03-05 14:39:47

கற்றனைத் தூறும் – உலகக்கடிகாரம் (Jens Olsen's World Clock)


Copenhagen மாநகர அரங்கில் 1955ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு உலகக்கடிகாரம் ஒன்று இயங்க ஆரம்பித்தது. இந்தக் கடிகாரத்தைத் திட்டமிட்டு வடிவமைத்தவர், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Jens Olsen என்ற தொழில்நுட்ப அறிஞர். உலகம் தன்னைத் தானே ஒரு முறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் 24 மணி நேர கால அளவிலிருந்து, விண்வெளியில் சுற்றிவரும் பல்வேறு கோளங்களின் சுழற்சிப் பாதையின் கால அளவு முடிய பல கால அளவுகளை உள்ளடக்கிய ஒரு கடிகாரத்தை வடிவமைக்க விரும்பினார் Jens Olsen. அதன்படி, 1934ம் ஆண்டு முதல் 1936ம் ஆண்டு வரை இவர் வரைந்த வடிவங்களின் அடிப்படையில் 1943ம் ஆண்டு உலகக் கடிகாரம் உருபெற ஆரம்பித்தது. 1945ம் ஆண்டு Jens Olsen மரணமடைந்தாலும், இக்கடிகார உருவாக்கம் நிறுத்தப்படாமல், 1955ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
இந்த அரிய கடிகாரம் 14,000க்கும் மேற்பட்ட சிறு சிறு பாகங்களைக் கொண்டு மிக, மிக நுணுக்கமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள வெவ்வேறு சக்கரங்களின் சுழற்சியால் இந்தக் கடிகாரம், நிலவின் வளர்பிறை, தேய்பிறை, சூரிய, சந்திர கிரகணம் போன்ற விண்வெளி நிகழ்வுகள் பலவற்றைத் துல்லியமாகக் காட்டும் திறமை பெற்றது. நிரந்தர நாள்காட்டி (perpetual calendar) ஒன்றும் இக்கடிகாரத்தின் ஒரு பகுதி. இதன் ஒரு சக்கரம் 10 நொடிக்கு ஒரு முறை சுற்றி வரும் வேகத்தில் இயங்குகிறது. வேறொரு சக்கரம் ஒரு முறை சுற்றி வர 25,753 வருடங்கள் எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
வாரத்திற்கு ஒருமுறை சாவி கொடுத்து முடுக்கப்படும் இக்கடிகாரம், முற்றிலும் சக்கரங்களின் சுழற்சியையும், Spring சக்தியையும் கொண்டு மட்டுமே இயங்குகிறது. மின் சக்தி, அணு சக்தி என்ற பிற சக்திகள் எதுவுமின்றி, இயக்கச் சக்தியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, கடந்த 58 ஆண்டுகளாய் இம்மியளவும் காலம் பிசகாமல் மிகத் துல்லியமாய் இயங்கி வரும் உலகக் கடிகாரம் இது ஒன்றே.








All the contents on this site are copyrighted ©.