2013-03-05 15:43:12

எய்ட்ஸ் நோயிலிருந்து குழந்தை காப்பாற்றப்பட்டதற்கு ஐ.நா. பாராட்டு


மார்ச் 05,2013. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறக்கும் போதே எய்ட்ஸ் நோயுடன் பிறந்த பெண் குழந்தை ஒன்று, தற்போது எந்தப் பாதிப்பும் இன்றி குணம் அடைந்துள்ளதைப் பாராட்டியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
இச்செய்தி குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா. எய்டஸ் நோய்க் கட்டுப்பாட்டு நிறுவன இயக்குனர் Michel Sidibé, மருத்துவர்களின் இச்சாதனை, HIV நோய்க் கிருமிகளைக் கொண்டுள்ள குழந்தைகளைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
தற்பொழுது இரண்டரை வயதுடைய அந்தப் பெண்குழந்தை எய்ட்ஸ் நோய்க் கிருமியிலிருந்து விடுபட்டு இருந்தாலும் நலமான உடல்நிலையில் இருக்கும் என்பதற்கு எந்தவித உறுதியும் கிடையாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு மிசிசிப்பி மாநிலத்தில் 2010ம் ஆண்டு ஜூலையில் பிறந்த இக்குழந்தையின் தாய், இக்குழந்தையைக் கருத்தாங்கி இருந்தபோதே HIV நோய்க் கிருமிகளுடன் இருந்தார், ஆனால் அதற்கான சிகிச்சை எதனையும் அத்தாய் எடுக்கவில்லை. ஆயினும் குறைப்பிரசவத்தில் பிறந்த இக்குழந்தைக்கு அது பிறந்த 30 மணி நேரங்களுக்குள் தொடங்கப்பட்ட சிகிச்சை, 18 மாதங்களாக தொடர்ந்து கொடுக்கப்பட்டது. தற்போது அக்குழந்தை அந்நோய்க்கிருமிகளின் பாதிப்பின்றி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
2011ம் ஆண்டில் உலகில் 3,30,000 குழந்தைகள் புதிதாக HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டனர், இவர்களில் 60 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் வறிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.