2013-03-04 15:37:13

கர்தினால்கள் அவையின் முதல் பொதுக் கூட்டம்


மார்ச்,04,2013. புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் தயாரிப்புக் கூட்டம் இத்திங்கள் காலை 9.30 மணிக்கு வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்திலுள்ள ஆயர்கள் மாமன்ற அறையில் தொடங்கியது.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்குத் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்கள் மட்டுமின்றி அனைத்துக் கர்தினால்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவையில் கலந்துகொள்ளவிருக்கும் 115 கர்தினால்களுள் 103 பேர் ஏற்கனவே உரோம் வந்துவிட்டதாகவும், மீதமுள்ளோர் பயணம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ, கான்கிளேவ் அவையில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்துக் கர்தினால்களும் வந்தபின்னரே, கான்கிளேவ் அவைக்கானத் தேதி குறிக்கப்படும் என்று அறிவித்தார்.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் அவை நடைபெறும் சிஸ்டீன் சிற்றாலயத்தை மூடுவது, கான்கிளேவ் அவை கூடும் நாள்களில் வத்திக்கான் புனித மார்த்தா பயணியர் விடுதியில் தங்கியிருக்கும் கர்தினால்களின் இரகசியப் பகிர்வுகள் யாராலும் ஒட்டுக்கேட்கப்பட முடியாத அளவுக்கு ஏற்பாடுகளைச் செய்தல் போன்ற விவகாரங்களும் இத்திங்கள் பொதுக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
மேலும், திருத்தந்தையின் தேர்தல் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் இம்மியும் பிசகாமல் இரகசியம் காப்பேன் என்று, கர்தினால்கள் ஒவ்வொருவரும் இந்த முதல் பொதுக்கூட்டத்தின் தொடக்கத்தில் சத்தியபிரமாணம் செய்தனர் என்றும், அனைத்துக் கர்தினால்களும் சேர்ந்து, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்குச் செய்தி ஒன்றை அனுப்பவிருப்பதாகவும், அச்செய்தி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் கூறினார் அருள்தந்தை லொம்பார்தி.
கர்தினால்கள் அவையின் இரண்டாவது பொதுக் கூட்டம் இத்திஙகள் மாலை 5 மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.