2013-03-02 15:41:03

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணியின்போது, கத்தோலிக்க-ஆர்த்தடாக்ஸ் உறவுகளில் நல்ல முன்னேற்றங்களைக் காண முடிந்தது


மார்ச்02,2013. கிறிஸ்தவ மரபை மதிப்பதை மையம் கொண்டிருந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் பாப்பிறைப் பணியின் காலம், கத்தோலிக்க-ஆர்த்தடாக்ஸ் உரையாடலுக்கு முக்கியமான மற்றும் நல்லதொரு காலமாக இருந்தது என்று, இரஷ்யாவுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Ivan Jurkovic கூறினார்.
கடந்த நூறு ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருஅவையின் பாப்பிறைகள், திருஅவையின் தேவைகள் மற்றும் நவீன சமுதாயத்தின் உணர்வுகள் குறித்து கவனம் செலுத்தினர் என்று Ria Novosti என்ற இரஷ்ய ஊடகத்திடம் கூறினார் பேராயர் Jurkovic.
அதேநேரம், 20ம் நூற்றாண்டில் இடம்பெற்ற பெரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை நோக்கினோமானால், கடந்த நூற்றாண்டில் பாப்பிறைகள் எதிர்கொண்ட சவால்களைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
இந்த அனைத்து மாற்றங்களும் புதிய கலாச்சாரப் போட்டிகளுக்கு இட்டுச் சென்றது மட்டுமல்லாமல், நாம் பார்க்கும் இவ்வுலகின் வழிகளில், குறிப்பாக, குடும்ப வாழ்வில் தீவிர மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன என்றும் பேராயர் கூறினார்.
ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுடன் ஏற்பட்டுள்ள உறவானது, நல்ல நேர்மறை அடையாளமாக இருக்கின்றது எனவும் பேராயர் Ivan Jurkovic பாராட்டினார்.







All the contents on this site are copyrighted ©.