2013-03-02 15:32:53

தவக்காலம் 3ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 பிப்ரவரி மாதத்தின் இறுதிநாள், 28ம் தேதி, வியாழனன்று உரோம் நேரம் 8 மணிக்கு திருத்தந்தையரின் கோடைவிடுமுறை இல்லமான Castel Gandolfoவின் தலைவாசல் கதவு மூடப்பட்டது. அதுவரை அவ்வில்லத்தைக் காவல் காத்த Swiss காவல் வீரர்கள், வத்திக்கான் காவல் வீரர்களிடம் தங்கள் பணியை ஒப்படைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி வத்திக்கானைச் சென்றடைந்தனர். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது அணிந்திருந்த மோதிரம் உடைக்கப்பட்டது.
இச்சடங்குகள் எல்லாம் உலகிற்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்துரைத்தன. அதாவது, கடந்த எட்டு ஆண்டுகள் உரோம் மறைமாவட்டத்தின் ஆயராகவும், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகவும் இருந்த 16ம் பெனடிக்ட் அவர்கள் தன் பொறுப்பைத் துறந்ததால், திருஅவையின் தலைமைப் பீடம் காலியானது என்பதே அந்த உண்மை. Sede Vacante என்ற இத்தாலியச் சொற்களின் பொருள், வெற்றிடமான தலைமைப் பீடம் அல்லது திருப்பீடம். தலைமைப் பீடம் காலியானது அல்லது வெற்றிடமானது என்ற சொற்களை பயன்படுத்தும்போது, மனதில் சிறிது பதைபதைப்பு உருவானதை உணர்ந்தேன்.

அறிவியலின்படி, வெற்றிடம் ஒன்று உருவானால், அவ்விடத்தை நிரப்ப காற்று பல திசைகளிலிருந்தும் வரும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தைப்பற்றி அடிக்கடி வானிலை அறிக்கையில் கேட்கிறோம். காற்றழுத்தம் குறைந்தாலோ, அல்லது காற்றில்லாமல் ஓரிடம் வெற்றிடமானாலோ, அவ்விடத்தை நோக்கி மேகங்கள் திரண்டு வந்து மழையும், புயலும் உருவாகும். திருஅவைத் தலைமைப்பீடத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது என்பதை எண்ணியபோது, இந்த எண்ணங்களும் உள்ளத்தில் எழுந்தன. இனம்புரியாத ஒரு சங்கடத்தை உருவாக்கின. நான் தற்போது வத்திக்கானிலேயே தங்கி பணியாற்றுவதால், இந்த வெற்றிடத்தின் பாதிப்புக்களைக் கூடுதலாக உணர முடிகிறது.

கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பீடத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தை நிறைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பமாகும். அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தகுதிபெற்ற கர்தினால்களின் சிறப்பு Conclave அவை துவங்குவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். அப்படியே அவர்கள் கூடி வந்தபின், செபத்திலும், ஆழ்ந்த விவாதங்களிலும் சில மணி நேரங்கள், அல்லது சில நாட்கள் செலவிட வேண்டியிருக்கும்.

கத்தோலிக்கத் திருஅவை வரைமுறைகளின்படி, தலைமைப் பீடம் மீண்டும் நிறைவடைய காலம் தேவை, பொறுமை தேவை. அந்த அளவுக்குப் பொறுமையுடன் காத்திருக்கும் பக்குவம் நம் உலகிற்கு இருக்குமா என்பது சந்தேகம்தான். வெகுவேகமாக இயங்கிவரும் உலகம் இது. கேள்வி என்ற ஒன்று எழுந்த ஒரு சில நொடிகளில் பதில் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் கணணி வேக உலகம் இது. அவ்விதம் உடனுக்குடன் பதில்கள் கிடைக்கவில்லையெனில், அதற்குக் காரணம் ஏதோ ஒரு பிரச்சனைதான் என்று முடிவுகட்டும் உலகம் இது. பொறுமையின்றி கேள்விகளை எழுப்பும் ஊடக உலகம், அது எதிர்பார்க்கும் பதில்கள் கிடைக்காதபோது, தனக்கே உரிய பாணியில், கதைகளை உருவாக்கிவிடும். இத்தகைய பொறுமையற்ற உலகம், இப்போது வத்திக்கானை வலம் வந்துகொண்டிருக்கிறது.

உரோமையில் தற்போது தங்கியுள்ள கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், அருள்சகோதரிகள், பொதுநிலையினர்... யாராக இருப்பினும், அவர்கள் கூறும் வார்த்தைகளைப் பதிவுசெய்வதில் ஊடக உலகம் மும்முரமாக உள்ளது. இவர்களது கூற்றுகளில் எவை சுவையான, பரபரப்பான எண்ணங்களாக உள்ளனவோ, அவையே தலைப்புச் செய்திகளாகி வருகின்றன. இவ்விதம் வெளியாகும் எண்ணங்களுக்கு அரசியல் வண்ணங்களும் பூசப்படுகின்றன. ஊடகத் துறைக்குத் தேவையானதெல்லாம் செய்தித்தாள்களின் பக்கங்கள் விறுவிறுப்பான செய்திகளால் நிறையவேண்டும்... தொலைக்காட்சி அல்லது வானொலி இவற்றின் 24 நேரமும் சுவையான நிகழ்ச்சிகளால் நிரப்பப்பட வேண்டும். இவை மூலம் ஊடக நிறுவனங்களின் விற்பனைத்தர புள்ளிகள் (Rating Points) கூடுதலாக வேண்டும்.

இத்தகைய வழிகளில் சிந்திக்கும் ஊடகங்கள், அடுத்தத் திருத்தந்தையின் தேர்வை ஏறத்தாழ ஓர் அரசுத் தலைவரின், அல்லது அரசியல் தலைவரின் தேர்தலைப் போல் காட்ட மேற்கொண்டுவரும் முயற்சிகள் வேதனையைத் தருகின்றன. திருஅவையின் தலைமைப் பீடத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தை ஊடகங்களிலிருந்து வரும் ஆதாரமற்ற கதைகள் நிறைத்துவிடும் என்ற பதைபதைப்பைத்தான் முதலில் குறிப்பிட்டேன். ஊடகங்கள் தொடர்ந்து கூறிவரும் இவ்வகை எண்ணங்கள் நம் மனங்களை நிறைப்பதுபோல், அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கச் செல்லும் கர்தினால்களின் மனங்களையும் நிறைக்கும் என்ற எண்ணம் என் பதைபதைப்பை அதிகரிக்கிறது.
Conclave அவை என்பது கர்தினால்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒரு புனிதமான பணி. இந்த அவை வத்திக்கானில் உள்ள புனிதமான, உலகப்புகழ்பெற்ற Sistine சிற்றாலயத்தில் நடைபெறும். இச்சிற்றாலயத்திற்கு அருகே அமைந்திருக்கும் புனித மார்த்தா இல்லத்தில் அனைத்து கர்தினால்களும் தங்க வேண்டும். Conclave அவை ஆரம்பமாகும் தேதிக்கு முந்தைய மாலையில் மட்டுமே இவர்கள் இவ்வில்லத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அதற்கு முன், இவ்வில்லத்தைச் சுற்றி பல பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்படும். புனித மார்த்தா இல்லத்தில் உள்ள தொலைக்காட்சி, தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்படும். அவ்வில்லத்தைச் சுற்றி மின்காந்த அலைகளால் ஆன அரண் ஒன்று அமைக்கப்படும். அங்கு தங்குபவர்கள் வெளி உலகுடன் எவ்வகையிலும் தொடர்பு கொள்ள முடியாமல் தடுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இவை.
கர்தினால்களின் எண்ணங்களும், விவாதங்களும், அவற்றின் முடிவில் அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் அவர்களின் முடிவுகளும் வெளி உலகின் தாக்கங்கள் எதுவுமின்றி நடைபெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இவற்றை மீறி, Conclave அவையில் பங்கேற்கும் கர்தினால்களில் ஒருவரோ, அல்லது இந்த அவையில் உதவிகள் செய்யும் ஒருவரோ வெளி உலகுடன் தொடர்பு கொண்டால், அவர் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்படுவார் என்ற கடுமையான சட்டமும் உண்டு.
இந்த ஏற்பாடுகள் பற்றிய செய்திகளைக் கேட்கும்போது, மனதில் ஒரு பாதுகாப்பான உணர்வு எழுகிறது. இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும், Conclave அவைக்குள் செல்வதற்கு முன், கர்தினால்களின் மனம் தற்போது சுற்றிவரும் வதந்திகள், கருத்துக்கள் ஆகியவற்றால் நிறைந்துவிட்டால், அங்கு புதிய எண்ணங்கள் நுழைய வழியில்லாமல் போகும். எனவே, Conclave சிறப்பு அவை ஆரம்பமாகும் முன்னர் கர்தினால்கள் தங்கள் சிந்தனைகளைத் தேவையற்ற எண்ணங்களால் நிறைத்துவிடக் கூடாது; முற்சார்பு எண்ணங்களுடன் அவர்கள் Conclave அவைக்குள் காலடி எடுத்துவைக்கக் கூடாது என இந்நாட்களில் தூய ஆவியாரிடம் நாம் சிறப்பாக வேண்டிக்கொள்வோம். திறந்த, தூய, வெற்றிடமான மனதோடு கர்தினால்கள் இந்தச் சிறப்பு அவையில் பங்கேற்கும்போதுதான், தூய ஆவியாரின் வழிநடத்துதல் அங்கே இருக்கும்.
மேலே குறிப்பிட்ட மனநிலை கர்தினால்கள் மத்தியில் உருவாகும் என எதிர்பார்ப்பது இன்றைய உலகில் சாத்தியமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம். இத்தகையச் சந்தேகங்களை நமக்குள் ஆழமாகப் பதித்துவிட்ட இந்த உலகப் போக்குகளிலிருந்து விடுதலை பெற்று, திருஅவையின் தலைவர்கள் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையுடன் நாம் வேண்டுவோம்.

தூய ஆவியார் நமது கர்தினால்களை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த, இன்றைய முதல் வாசகத்தை இறைவன் நமக்கு வழங்கியுள்ளார் என எண்ணிப் பார்க்கலாம். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த மோசேயை, எரியும் புதர் வழியாக ஆண்டவர் அழைத்த அற்புதமான நிகழ்வை இன்று நாம் சிந்திப்பது, நம் அனைவருக்கும், சிறப்பாக, நமது கர்தினால்களுக்கு இறைவன் விடுக்கும் புதியதோர் அழைப்பைப் போல் தெரிகிறது.

நாம் வாழும் இன்றைய உலகைப் படம்பிடித்துக் காட்ட, எரியும் புதரைவிடச் சிறந்த அடையாளம் இருக்கமுடியுமா? அந்தப் புதர் தொடர்ந்து எரிந்தாலும், அது தீய்ந்து போகவில்லை என்றும், அதனால் மோசே அதிகம் வியப்படைந்து அந்தப் புதரை அணுகினார் என்றும் இன்றைய வாசகம் கூறுகின்றது. ஏன் முட்புதர் தீய்ந்து போகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்(விடுதலைப்பயணம் 3: 3) என்று மோசே தனக்குள் பேசிக்கொண்டே எரியும் புதரை அணுகினார். இன்றைய உலகின் பிரச்சனைகளும் தொடர்ந்து முடிவின்றி எரிந்துகொண்டிருப்பதைப் போல் நாம் உணர்கிறோம். எரிந்துகொண்டிருக்கும் புதரில் இறைவன் இருந்தார். அவர் வேறெங்கும் செல்லவில்லை. எகிப்தின் அடிமைத் தனத்தில் துன்புறும் மக்களின் சார்பாக, எரியும் புதரில் நின்று இறைவன் மோசேயை அழைத்தார்.

இன்றைய உலகிலும், திருஅவையிலும் தீராமல் எரிந்துகொண்டிருக்கும் பிரச்சனைகளின் நடுவில் நின்று, திருஅவைத் தலைவர்களான கர்தினால்களை இறைவன் அழைக்கிறார். Conclave அவையின் துவக்கத்தில் இன்றைய உலகின் நிலை, இன்றையத் திருஅவையின் நிலை ஆகியவற்றை கர்தினால்கள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும் என்பது இந்த அவைக்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறை. தீராமல் எரிந்துகொண்டிருப்பதாய்த் தோன்றும் இவ்வுலகின் பிரச்சனைகளையும், முக்கியமாக, திருஅவையின் பிரச்சனைகளையும் இன்னும் நெருங்கிப் பார்க்க கர்தினால்கள் செல்லும்போது, அங்கு இறைவனின் அழைப்பு ஒலிக்கும்.

எரியும் புதரை நெருங்கிய மோசே, மிதியடிகளைக் கழற்றிவிட்டு வரவேண்டும் என்பது இறைவன் தரும் முதல் நிபந்தனை. அதேபோல், Conclave அவையில் நுழையும்போது, அதுவரை கர்தினால்கள் சுமந்துச்செல்லும் பல்வேறு முற்சார்பு எண்ணங்களைக் கழற்றிவைத்துவிட்டு, தாங்கள் ஒரு புனித இடத்திற்குள், ஒரு புனித பணிக்கென அழைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணத்துடன் இந்த அவையில் அவர்கள் காலடி எடுத்துவைக்க வேண்டும் என்று இறை ஆவியாரைச் சிறப்பாக வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.