2013-03-02 15:46:33

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் நம்பிக்கையின் ஒளிவிளக்குகள்


மார்ச்02,2013. “கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் : நம்பிக்கையின் ஒளிவிளக்குகள்” என்ற தலைப்பில் திருப்பீட முஸ்லீம்களுடனான உறவுகளின் அவை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கலந்துரையாடல்களை நடத்தவிருக்கின்றது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
திருப்பீட முஸ்லீம்களுடனான உறவுகள் அவை, இவ்வாரத்தில் நடத்திய மூன்று நாள்கள் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Tauran, 7ம் நூற்றாண்டில் இசுலாம் மதம் உருவானது முதல் கிறிஸ்தவ-முஸ்லீம் உறவுகளில் காணப்படும் குழப்பமான வரலாறு பற்றிக் குறிப்பிட்டு, வரலாறு ஏதோ கடந்த கால நிகழ்வு என்று மட்டும் நோக்கப்படக் கூடாது, ஏனெனில் அது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நேர்மறையான அல்லது எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
1974ம் ஆண்டில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் நிறுவப்பட்ட கிறிஸ்தவ-முஸ்லீம் உரையாடல் அவையில், ஈராக், நைஜீரியா, பாகிஸ்தான், இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த எட்டு கத்தோலிக்க வல்லுனர்களும் உள்ளனர்.
கிறிஸ்தவ-முஸ்லீம் உரையாடல் அவை, திருப்பீட பல்சமய உரையாடல் அவையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.