2013-03-01 15:51:12

மன்னார் ஆயர் கொழும்புச் சிறையில் தமிழ்க் கைதிகளைப் பார்வையிட்டார்


மார்ச்01,2013. இலங்கையின் மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு அவர்களும், அந்நாட்டின் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவும் கொழும்பிலுள்ள புதிய மகசின் சிறைக்குச் சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
கைதிகளின் நலன்கள், அவர்களின் வழக்கு விசாரணையின் நிலைமைகள் போன்றவை குறித்து இவர்கள் கேட்டறிந்தனர் என்றும், தன்னை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, அச்சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தியாகராஜா பிரபாகரன் என்ற கைதியை அவர்கள் சந்தித்தனர் என்றும் அந்த ஊடகச் செய்தி கூறுகிறது.
மன்னார் ஆயரிடம் பேசிய அச்சிறையின் தமிழ் அரசியல் கைதிகள், அங்குள்ள பலதரப்பட்ட கைதிகளின் நிலைமைகளையும் விளக்கியுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக அரசு பல தடவைகள் உறுதிமொழிகளை வழங்கியிருக்கின்றபோதிலும் இன்னும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அக்கைதிகள் தெரிவித்தனர்.







All the contents on this site are copyrighted ©.