2013-03-01 15:42:29

கர்தினால்கள் அவையின் முதல் பொது அமர்வு மார்ச் 04, திங்கள்


மார்ச்01,2013. கர்தினால்கள் அவையின் முதல் பொது அமர்வு மார்ச் 04, திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கும் என, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ அறிவித்துள்ளார்.
“Universi dominici gregis” என்ற அப்போஸ்தலிக்க சட்ட அமைப்பின் விதிமுறைகளின்படி, திருப்பீடம் திருத்தந்தையின்றி காலியாக இருக்கும் மார்ச் முதல் நாளான இவ்வெள்ளியன்று அனைத்துக் கர்தினால்களையும் முதல் பொது அமர்வில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் சொதானோ.
அனைத்துக் கர்தினால்களின் முதல் பொது அமர்வு, மார்ச் 04, வருகிற திங்கள் காலை 9.30 மணிக்கு, திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தின் ஆயர்கள் மாமன்ற அறையில் தொடங்கும். இரண்டாவது பொது அமர்வு அன்று மாலை 5 மணிக்கு அதே இடத்தில் நடைபெறும் என கர்தினால் சொதானோ அனைத்துக் கர்தினால்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இன்று திருஅவையில் மொத்தம் 207 கர்தினால்கள் உள்ளனர். இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்கு உட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 117.
மேலும், இவ்வியாழன் இரவு 8 மணிக்குப் பிறகு, வத்திக்கானிலுள்ள பாப்பிறையின் அறைகள் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளன. அவை புதிய திருத்தந்தையால் மட்டுமே திறக்கப்படும்.








All the contents on this site are copyrighted ©.