2013-02-28 16:20:39

இந்திய கத்தோலிக்க மக்கள் திருத்தந்தை மீது கொண்டிருக்கும் அன்பையும், நன்றி உணர்வையும் சுமந்து உரோம் நகர் வந்துள்ளேன் - கர்தினால் Gracias


பிப்28,2013. இந்தியாவில் உள்ள 1 கோடியே 80 இலட்சம் கத்தோலிக்க மக்கள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மீது கொண்டிருக்கும் அன்பையும், நன்றி உணர்வையும் சுமந்து உரோம் நகர் வந்துள்ளேன் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Oswald Gracias கூறினார்.
திருத்தந்தை வழங்கிய இறுதி புதன் பொது மறைபோதகத்தில் கலந்துகொள்ளவும், தொடர்ந்து நடைபெறவிருக்கும் Conclave கர்தினால்கள் அவையில் கலந்து கொள்ளவும் உரோம் நகர் வந்திருக்கும் மும்பை பேராயர் கர்தினால் Gracias, திருத்தந்தையின் தன்னலமற்ற சேவை, செப வாழ்வு, திருஅவை அழகின் மீது அவர் கொண்டிருந்த இரசனை ஆகியவற்றைப் பற்றி எடுத்துரைத்தார்.
துவங்கவிருக்கும் Conclave அவையை, தூய ஆவியார் வழிநடத்த வேண்டும் என்று தான் கடந்த நாட்களில் செபித்து வருவதாகக் கூறிய கர்தினால் Gracias, மாறி வரும் உலகின் அடையாளங்களைப் புரிந்துகொண்டு, திருஅவையை வழிநடத்தும் ஒரு தலைவரைப் பெறவேண்டுமென்று அனைவரும் செபிக்குமாறும் கூறினார்.
Conclave கர்தினால்கள் அவை நடைபெறும் நாட்களில் மக்கள் அனைவரும் சிறப்பாகச் செபிக்கும்படி வேண்டி அனைத்து கத்தோலிக்கப் பங்குதலங்களுக்கும், துறவியர் இல்லங்களுக்கும், சிறப்பாக செபத்திற்கென தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ள துறவியர் இல்லங்களுக்கும் மடல் ஒன்றை அனுப்பியுள்ளதாக கர்தினால் Gracias எடுத்துரைத்தார்.
இந்திய நாட்டின் பாதுகாவலாரான புனித பிரான்சிஸ் சேவியர், இந்திய மக்களுக்கென வாழ்வை அர்ப்பணித்த அருளாளர் அன்னை தெரேசா ஆகியோரின் பரிந்துரையோடு மக்கள் வேண்டுதல்களை எழுப்பவேண்டும் என்று கர்தினால் Gracias விண்ணப்பித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.