2013-02-27 16:51:11

பிப்.28. கற்றனைத்தூறும்...... மதுரை மீனாட்சியம்மன் கோவில்


மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவில், 'மீனாட்சி சுந்தரேஸ்வரர்' கோவில் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்தக் கோவிலின் பின்னணி 800 வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. மதுரை மீனாட்சி கோவில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கபட்டபோதிலும், தற்போது இருந்துவரும் கட்டிட அமைப்பு நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட 17ம்-18ம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்டதாக கோவிலின் வரலாறு குறிப்பிடுகின்றது. பல நூற்றாண்டு கட்டிடத் தொன்மையுள்ள மீனாட்சியம்மன் கோவிலானது திராவிட நாகரீகத்திற்கும், சிற்பக் கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அமைந்துள்ள முதன்மை தெய்வச்சிலை, முழுவதுமாக தூய மரகத மாணிக்கத்தினால் உருவாக்கப்பட்டதாகும். மரகதத்தின் இயற்கை வர்ணமான பச்சை நிறத்தில் காட்சி தரும் முக்கிய தெய்வச்சிலையை "மரகதவல்லி" எனவும் அழைக்கின்றனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் 45 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் மொத்த தள அமைப்பு 254 மீட்டர் நீளமும் 237 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. இந்த ஆலயம் 8 கோபுரங்களைக் கொண்டுள்ளது. 8 கோபுரங்களும், நான்கு முனை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள இரட்டைக் கோபுரத்தில் ஒன்று மீனாட்சிக்கும், மற்றொன்று சுந்தரேஸ்வரர்க்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட கோபுரங்களுள் பிரசித்தமானதும் மிக உயரமானதுமான தெற்கு வாசல் 170 அடி உயரமுடையது. ஏனைய வடக்கு, மேற்கு, கிழக்கு கோபுரங்கள் முறையே 160, 163, 161 அடி உயரம் என்பதும் குறிப்பிடதக்கது. மீனாட்சியம்மன் கோவில் பல உள்ளக மண்டபங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் ஆயிரம் கால் (1000 தூண்கள்) மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலின் உட்பகுதியில் ஓர் ஏக்கர் அளவில் அமைந்துள்ள பொற்தாமரை குளம், மேலும் சிறப்பு சேர்க்கின்றது.
வரலாற்றுத் தொன்மையும் பிரமிக்கவைக்கும் கலை நுணுக்கமும் ஒன்றுசேர விளங்கும் இக்கோவிலானது உலக அதிசயங்களின் வரிசையில் போட்டி போடுமளவிற்கு சிறப்பு மிக்கது.








All the contents on this site are copyrighted ©.