2013-02-27 16:27:40

கிளிமஞ்சாரோ மலை உச்சிக்கு ஏறும் பெண் வீரர்களின் குழு


பிப்.27,2013. உலகெங்கிலும், சிறப்பாக ஆப்ரிக்க, ஆசிய கண்டங்களில் வாழும் பெண்கள் பல்வேறு சமுதாயத் தடைகள், பிரச்சனைகள் ஆகிய மலைகளைத் தாண்ட வேண்டியுள்ளது என்று மலையேறும் பெண் வீரர்களின் குழு ஒன்று கூறியுள்ளது.
உலகில் பெண்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாக, ஆப்ரிக்க, ஆசிய பெண் வீரர்கள் அடங்கிய குழு ஒன்று இவ்வியாழனன்று ஆப்ரிக்காவின் டான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை உச்சிக்கு ஏறும் முயற்சியைத் துவக்கியுள்ளனர்.
நேபாளத்தைச் சேர்ந்த ஏழு பெண்களும், மூன்று ஆப்ரிக்கப் பெண்களும் கொண்ட இக்குழுவில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தை அடைந்த மிக இளம்வயதுள்ள பெண் என்ற சாதனையைப் படைத்த Nimdoma Sherpa என்ற நேபாள பெண்ணும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
குழந்தைத் திருமணம், பாலியல் வன்கொடுமைகள், ஆண் பெண் பாலின பாகுபாடுகள், பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு ஆகிய பிரச்சனைகளுக்கு உலகச் சமுதாயம் தீர்வு காண வேண்டும் என்பாதை வலியுறுத்த இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இப்பெண் வீரர்கள் கூறியுள்ளனர்.
ஐ.நா.அவையும் இன்னும் பிற பெண் விடுதலை அமைப்புக்களும் மலையேறும் இப்பெண்களின் முயற்சிக்கு ஆதரவு வழங்கியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.