2013-02-26 15:25:01

விவிலியத்
தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 3


RealAudioMP3 உலகப்புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமை என்ற கடலின் கரையில் நின்றபடி நாம் திரட்டக்கூடியச் செல்வங்களைச் சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். அந்தக் கடலிலிருந்து கரையை நோக்கி வரும் அலைகளில் இன்று நாம் கால்களை நனைப்போம். திருச்சட்ட அறிஞருக்கும், இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் நம் தேடலின் மையமாகிறது இன்று. இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலின் ஆரம்பத்தை லூக்கா இவ்விதம் தன் நற்செய்தியில் பதிவு செய்துள்ளார்.
லூக்கா நற்செய்தி 10: 25-26
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார்.

திருச்சட்ட அறிஞர் ஒரு கேள்வியைத் தொடுக்கிறார். அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், இயேசு மாற்றுக் கேள்வியைத் தொடுக்கிறார். அறிஞர் தொடுத்த கேள்வியில், இயேசுவைச் சோதிக்கும் நோக்கம் இருந்ததென்று லூக்கா தெளிவாகக் கூறியுள்ளார். இயேசு கேட்ட மறுகேள்வியில் நோக்கமேதும் இருந்ததா? கற்பனையில் நாமும் இந்த உரையாடல் நிகழும் இடத்திற்குச் செல்வோம். இயேசுவின் கேள்வியில் பொதிந்திருந்த பொருளைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

இயேசுவின் கேள்வியை இரு கண்ணோட்டங்கள் கொண்டு பார்க்கலாம். தானே திருச்சட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் என்றும், இயேசுவுக்கு அந்த அளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் மக்கள் முன் வெளிச்சம்போட்டுக் காட்ட விழைந்தார் அந்த அறிஞர். அவரது அறிவுத்திறனைக் கண்காட்சியாக மக்கள் முன் காட்ட இயேசு ஒரு வாய்ப்பளித்தார் என்று அர்த்தம் கொள்வது, இயேசுவின் கேள்விக்கு நாம் தரும் ஒரு கண்ணோட்டம். குழந்தை ஒன்று பளபளப்பான உடை அணிந்து, தன்னையே ஓர் அரசனாகக் கற்பனை செய்து, வீட்டைச் சுற்றிவரும்போது, அக்குழந்தையின் பெருமித நடையை கைதட்டி இரசிக்கும் பெரியவர்களைப் போல், அந்த அறிஞர் தன் பெருமையைப் பறைசாற்ற இயேசு ஒரு வாய்ப்பளித்தார் என்று எண்ணிப் பார்க்கலாம்.

அடுத்தக் கண்ணோட்டம் இதற்கு நேர்மாறானது. “திருச்சட்ட அறிஞராகிய நீரா இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்? உம் கேள்விக்கு, திருச்சட்ட நூலிலேயே பதில் உள்ளதே; அந்நூலில் இதுவரை என்னதான் வாசித்துள்ளீர்?” என்று மக்கள் முன்பாகவே அறிஞரைச் சாடும் வகையில் இயேசு இவ்விதம் கேட்டதாகவும் நாம் பொருள் கொள்ளலாம்.
பொதுவாகவே, இயேசு மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் ஆகியோரைப்பற்றி உயர்வான எண்ணங்கள் கொண்டிருக்கவில்லை என்பதை நற்செய்திகளில் நாம் பல இடங்களில் பார்க்கிறோம். அதிலும், ஒரே கல்லில் இரு காய்கள் என்ற அளவில், தன் அறிவுத்திறனை நிலைநாட்டவும், இயேசுவை மக்களின் மதிப்பில் குறைத்துக் காட்டவும் விழைந்த இந்த அறிஞரின் முகபாவம், அவர் கேள்வியில் ஒலித்த அகம்பாவம் இவற்றை இயேசு கண்டதால், அவரைப் பற்றிய உயர்வான எண்ணங்கள் இயேசுவுக்கு இருந்திருக்காது. அதேநேரம், அந்த அறிஞருக்கு உதவி செய்யவும் இயேசு முயன்றார் என்று எண்ணிப்பார்க்கலாம். அவரது பெருமைக் கனவுகளிலிருந்து அவரை விழித்தெழச் செய்வதற்கு இயேசு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாம்.

இயேசுவின் கேள்வியில் இருந்த சவாலையோ, வெப்பத்தையோ திருச்சட்ட அறிஞர் உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். பெருமையில் தன்னிலை மறந்தவர்கள், அடுத்தவர் கேட்கும் கேள்வியில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள முடியாமல், தங்கள் பெருமையை நிலைநாட்டுவதிலேயே குறியாய் இருப்பர். இத்தகையோரை நாம் சந்தித்திருக்கிறோம். அத்தகையச் சூழல்தான் அன்று இயேசுவுக்கும், திருச்சட்ட அறிஞருக்கும் இடையே உருவாகியிருந்தது. தன் திருச்சட்டநூல் அறிவை மக்களுக்கு முன் கண்காட்சியாக்குவதிலேயே அவர் மும்முரமாக இருந்தார்.

திருச்சட்ட அறிஞரின் முதல் கேள்வியில் இருந்த ஒரு குறையை ஒரு சில விவிலிய ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது, "நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்வி, நிலைவாழ்வைப் பற்றிய தவறான ஒரு கண்ணோட்டம் கொண்ட கேள்வி என்று அவர்கள் கூறுகின்றனர்.
நிலைவாழ்வு என்பது தந்தையாம் இறைவன் வழங்கும் ஓர் அன்புக் கொடை. தந்தையாம் இறைவனின் இல்லத்தில், நிலைவாழ்வு பெறுவதற்கு எதையும் செய்யத் தேவையில்லை. அந்த இல்லத்தில், அக்குடும்பத்தில் ஒரு குழந்தையாய் வாழ்ந்தாலே போதும். தன் சொந்த முயற்சியால் ஏதோ ஒன்றை சாதித்து, அந்தச் சாதனைக்குப் பரிசாக, நிலைவாழ்வைப் பெறமுடியும் என்ற இறுமாப்பான எண்ணத்தில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. சாதனைகளால் நிலைவாழ்வை அடையமுடியும் என்று அறிஞர் கொண்டிருந்த தவறான கண்ணோட்டத்தை நீக்க இயேசு தன் மறுகேள்வியின் வழியாக முயற்சிக்கிறார் என்று விவிலிய ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

அறிஞரின் கேள்வியில் இருந்த தவறை உணர்த்த, அவரது கவனத்தை திருச்சட்டங்கள் நோக்கித் திருப்புகிறார் இயேசு. "திருச்சட்ட நூலில் என்ன வாசிக்கிறீர்?" என்று இயேசு கேட்டதும், எவ்விதத் தயக்கமும் இன்றி அறிஞர் திருச்சட்டங்களின் இரு பகுதிகளை மனப்பாடமாகச் சொல்கிறார்:
லூக்கா நற்செய்தி 10: 27
திருச்சட்ட அறிஞர் மறுமொழியாக, “‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாகஎன்று எழுதியுள்ளதுஎன்றார்.

கிறிஸ்தவ வாழ்வின், இன்னும் சொல்லப்போனால், உயர்ந்ததோர் மனித வாழ்வின் ஆணிவேராக அமையும் இருபெரும் ஆணைகளை ஒரு திருச்சட்ட அறிஞரின் வாய்வார்த்தைகளாக இயேசு சொல்ல வைத்திருப்பது அழகு.
இதே வார்த்தைகளை மத்தேயு (22:35-40), மாற்கு (12:28-34) என்ற இரு நற்செய்திகளில் நாம் இயேசுவின் கூற்றாகக் காண்கிறோம். திருச்சட்ட அறிஞர் ஒருவரும், மறைநூல் அறிஞர் ஒருவரும் "தலைசிறந்த அல்லது முதன்மையான கட்டளை எது?" என்று கேள்விகளைத் தொடுத்தபோது, இறையன்பையும், பிறரன்பையும் இணைத்து ஒரே மூச்சில், ஒரே கட்டளையாக இயேசு பதிலளித்தார்.

இயேசுவின் வார்த்தைகளாகவோ, திருச்சட்ட அறிஞரின் வார்த்தைகளாகவோ சொல்லப்பட்டுள்ள இந்த வரிகள் பழைய ஏற்பாட்டின் இருவேறு பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. கடவுளாகிய ஆண்டவரை முழுமையான ஈடுபாட்டுடன் அன்பு செய்யவேண்டும் என்ற கட்டளை இணைச்சட்ட நூலில் கூறப்பட்டுள்ளது. இறையன்பு எவ்வளவு தூரம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் நிறைக்க வேண்டும் என்பதை இந்நூலின் பின்வரும் வரிகள் தெளிவாக்குகின்றன:

இணைச்சட்ட நூல் 6: 4-9
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. கையில் அடையாளமாக அவற்றைக் கட்டிக்கொள். உன் கண்களுக்கிடையே அடையாளப்பட்டமாக அவை இருக்கட்டும். வீட்டின் கதவு நிலைகளிலும் நுழை வாயில்களிலும் அவற்றை எழுது.

இறையன்புக்குத் தரப்பட்டுள்ள அதே முக்கியத்துவம், அயலவர் அன்புக்கும் தரப்பட்டுள்ளது. அயலவர் அன்பைப்பற்றிக் கூறும் லேவியர் நூல் 19ம் பிரிவின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் இவை:
லேவியர் நூல் 19:1-3
ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள். என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
என்று ஆரம்பமாகும் இப்பிரிவில் இஸ்ரயேல் மக்கள் கடைபிடிக்கவேண்டிய பல்வேறு விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன. தூயவராம் இறைவனைப் போல் மக்கள் வாழ்வதற்கு இந்தக் கட்டளைகள் தரப்பட்டுள்ளன. அக்கட்டளைகளில் ஒன்றாக 18ம் இறைசொற்றோடரில் நாம் வாசிப்பது ஒரு முக்கியமான கட்டளை:
லேவியர் நூல் 19:17-18
உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே!...பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!

கிறிஸ்தவப் பாரம்பரியத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து உண்மையான மதங்களுக்கும் ஆணிவேரென, இரு கண்களென விளங்கும் இறையன்பு, அயலவர் அன்பு என்ற இரண்டு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில், இணைச்சட்ட நூல், லேவியர் நூல் என்ற இருவேறு இடங்களில் சொல்லப்பட்ட இவ்விரு கட்டளைகளையும் திருச்சட்ட அறிஞர் இணைத்துச் சொன்னது இயேசுவுக்கு மகிழ்வைத் தந்திருக்கும். அவர் அறிஞரிடம், சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர் என்றார்.
இயேசுவின் இந்த வார்த்தைகளை வேறொரு வகையில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். “அறிஞரே, நமது அறிவுசார்ந்த விவாதங்கள் போதும், நீர் சொன்ன வார்த்தைகளை வாழ்ந்து காட்டும்” என்று விடை கொடுத்தார் இயேசு. ஆனால், திருச்சட்ட அறிஞர் விவாதத்தைத் தொடர நினைத்தார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். என்று நாம் லூக்கா நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்தக் கேள்விதான் நல்ல சமாரியர் உவமைக்கு நுழைவாயிலாக அமைந்தது. தொடர்வோம் நம் தேடலை.








All the contents on this site are copyrighted ©.