2013-02-26 15:47:50

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவி விலகிய பிறகு "முன்னாள் திருத்தந்தை" என அழைக்கப்படுவார்


பிப்.26,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவி விலகிய பிறகு "His Holiness திருத்தந்தை 16ம் பெனடிக்ட்" எனவும், முன்னாள் திருத்தந்தை எனவும் அழைக்கப்படுவார் என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவி விலகிய பிறகு எவ்வாறு அழைக்கப்படுவார், எந்த உடை உடுத்துவார் என்றெல்லாம் எழுப்பப்பட்டுவந்த கேள்விகளுக்கு இச்செவ்வாயன்று நிருபர் கூட்டத்தில் பதிலளித்த அருள்தந்தை லொம்பார்தி, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவி விலகிய பிறகு சாதாரண எளிய வெள்ளை அங்கியையும், மெக்சிகோவில் அவருக்கு அளிக்கப்பட்ட கருஞ்சிவப்புநிற காலணிகளையும் அணிவார் என்றும், திருத்தந்தையின் பதவிக்குரிய அவரது மோதிரம், வத்திக்கான் மரபுப்படி உடைக்கப்படும் என்றும் கூறினார்.
இச்செவ்வாயன்று திருத்தந்தை செபத்தில் செலவிட்டார் என்றும், இந்நாள்களில் அன்பும் நன்றியும் நிறைந்த செய்திகளை நூற்றுக்கணக்கானத் தலைவர்களிடமிருந்து அவர் பெற்று வருகிறார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.
திருத்தந்தையின் இறுதிப் புதன் பொது மறைபோதகத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இப்புதன் பொது மறைபோதகம் முடிந்த பின்னர், சுலோவாக்கிய அரசுத்தலைவர், சான் மரினோ குடியரசின் பிரதிநிதிகள் என, சில தலைவர்களைத் திருத்தந்தை சந்திப்பார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி அறிவித்தார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தனது தலைமைப் பொறுப்பிலிருந்து விடைபெறும் இறுதி நாளான வியாழன் காலையில் திருத்தந்தை, கர்தினால்களைச் சந்திப்பார் என்றும், வியாழன் உரோம் நேரம் மாலை 4.55 மணிக்கு, திருப்பீடச் செயலக அதிகாரிகள் அவரை வாழ்த்துவார்கள், பின்னர் 5 மணிக்கு வத்திக்கானிலிருந்து காஸ்தெல் கந்தோல்ஃபோவுக்கு ஹெலிகாப்டரில் புறப்படுவார் என்றும், காஸ்தெல் கந்தோல்ஃபோவில், அந்நகர் மேயர் திருத்தந்தையை வரவேற்பார் என்றும் அருள்தந்தை லொம்பார்தி நிருபர் கூட்டத்தில் தெரிவித்தார்
திருஅவை வரலாற்றில் கடந்த 600 ஆண்டுகளில் பாப்பிறைப் பதவியிலிருந்து விலகிய முதல் திருத்தந்தையாக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.