2013-02-25 17:25:57

66 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து


பிப்.25,2013. தமிழகத்தில், இரண்டாம் சுற்றுப் போலியோ சொட்டு மருந்து முகாமில், இஞ்ஞாயிறன்று, மாநிலம் முழுவதும், 66 இலட்சம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்தியாவில், போலியோ நோயை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும், இரண்டு தவணைகளாக, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
40 ஆயிரம் மையங்களில், காலை, 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடந்த சொட்டு மருந்து வழங்கும் முகாமில், 70 இலட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் 1,306 மையங்களில், 5 இலட்சத்து 82 ஆயிரம் குழந்தைகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள குழந்தைகளுக்கு, ஐந்து நாள்களாக வீடு தேடிச் சென்று, சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதன்மை வாயில் பகுதியில் உள்ள சொட்டு மருந்து முகாம், இம்மாதம், 26ம் தேதி வரை இயங்கும் எனவும், இம்மையத்தில், 24 மணி நேரமும் சொட்டு மருந்து வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு இரயில்வே மருத்துவப் பிரிவு தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.