2013-02-23 16:41:29

தவக்காலம் - 2வது ஞாயிறு : ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 இன்று தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இஞ்ஞாயிறன்றும் நம் எண்ணங்களை வத்திக்கானை நோக்கி, திருஅவையை நோக்கித் திருப்புவோம். வரலாறு காணாத மாற்றங்கள் வத்திக்கானில் நடைபெறுவதாகச் சொல்லி வருகிறோம். இது உண்மை. ஆனால், இந்த மாற்றங்களை வெறும் வெளிப்படையான கண்காட்சிப் பொருளாக மட்டும் பார்க்காமல், இந்த மாற்றங்களால் திருஅவையின் வாழ்வில் உருவாகியுள்ள, உருவாகவேண்டிய ஆழமான மாற்றங்களைப் பற்றியும் சிந்திப்பது நல்லது.
ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சந்தித்த சோதனைகளைப் பற்றி சிந்திக்கவும், இரண்டாம் ஞாயிறு இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வைச் சிந்திக்கவும் நமது வழிபாட்டில் வாய்ப்புக்கள் தரப்படுகின்றன. தவக்காலத்தில் சோதனைகளைப் பற்றி சிந்திப்பது பொருத்தமாகத் தெரிகிறது. ஆனால், இயேசு தோற்றம் மாறும் நிகழ்வை ஏன் தவக்காலத்தில் சிந்திக்க வேண்டும் என்ற நெருடல் எழலாம். கண்ணைப் பறிக்கும் ஒளியில் இயேசு மலைமீது தோற்றம் மாறி நின்ற காட்சியை உயிர்ப்பு காலத்தில் சிந்திப்பது பொருத்தமில்லையா என்ற கேள்வி எழுகிறது.
சோதனைகள் மனித வாழ்வின் இணைபிரியாத ஓர் அனுபவம் என்றால், உருமாற்றமும் மனித வாழ்வின் மையமான ஓர் அனுபவம். பிறந்த எவ்வுயிரும் மாற்றமின்றி இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே மாற்றம் பெறும். எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. எனவே அடிப்படையான உலக நியதியான மாற்றத்தைப் பற்றி சிந்திக்க முயல்வோம்.

'இயேசு தோற்றம் மாறுதல்' என்ற இந்நிகழ்வு, ஒரு மலைமீது குறுகிய நேரமே நடந்தது. அதைத் தொடர்ந்து, சீடர்களும் இயேசுவும் மீண்டும் தங்கள் வழக்கமான உலகத்திற்கு இறங்கி வந்து, தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். ஆனால், அந்த மலையில் ஏற்பட்ட அனுபவம், சீடர்களின் மனதில் ஆழமாய்ப் பதிந்து, அவர்கள் வாழ்வில் நல்ல பல மாற்றங்களை உருவாக்கியது என்பதை வரலாறு சொல்கிறது. வத்திக்கானில் இப்போது ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி முதல் அடுத்தத் திருத்தந்தையின் அறிவிப்பு வெளிவரும் வரையில் திருஅவை வரலாற்றில் 40 அல்லது 50 நாட்கள் செல்லக்கூடும். இந்தக் கால அளவு திருஅவை வரலாற்றில் மிகக் குறுகிய ஒரு காலம்... இயேசு மலைமீது தோற்றம் மாறிய காலத்தைப் போல். ஆனால் இந்த 50 நாட்கள் அனுபவம் திருஅவையில் ஆழமான மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பதே நமது செபமாக இந்த நாட்களில் அமையவேண்டும்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவைத் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக இன்னும் ஐந்து நாட்கள் உள்ளன. பல தலைவர்கள் அவர் அறிவித்த முடிவைப் பற்றி கருத்துக்கள் கூறியவண்ணம் உள்ளனர். அவர் இந்த முடிவை எடுப்பதற்கு மிகுந்த துணிவும், அதேநேரம் பணிவும் கொண்டிருந்தார் என்பதே பரவலான கருத்து. மாற்றங்களை அதிகம் விரும்பாதவர் என்று கூறப்பட்ட 16ம் பெனடிக்ட், புரட்சிகரமான இந்த மாற்றத்தை அறிவித்ததைக் குறித்தும் கருத்துக்கள் கூறப்படுகின்றன.

இக்கருத்துக்களில் ஒன்று, இறை பக்தியோ, மத நம்பிக்கையோ இல்லாத ஒரு மனிதநேயப் பணியாளரிடமிருந்து வந்தது. இந்தியாவின் வாரணாசி நகரில் People's Vigilance Committee on Human Rights, அதாவது, மனித உரிமைபற்றிய மக்களின் கண்காணிப்புக் குழு என்ற அமைப்பை நடத்தி வருபவர் Lenin Raghuvanshi. மனித உரிமைக்குப் பாடுபடும் இவரது பணியை பாராட்டி, இந்தியாவிலும், இன்னும் சில நாடுகளிலும் இவருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் நான்கு நாட்களுக்கு முன் Asia News என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை மனதாரப் புகழ்ந்திருந்தார். தன் சொந்த வாழ்வில் திருத்தந்தை ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும் அழகாகக் கூறியிருந்தார்.
"நான் பிறந்தது இந்து மதத்தில்... அங்கு நிலவிய சாதியப் பிரிவுகளையும், தலித் மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற நிலைப்பாட்டையும் கண்டு, மதத்தையும், இறைவனையும் நான் வெறுத்து ஒதுக்கினேன். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இறைவன், மதம் என்ற எண்ணங்களை மீண்டும் என் மனதில் விதைத்தார்.
2005ம் ஆண்டு 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, இவரைப் பழமைவாதி, மாற்றங்களை விரும்பாதவர் என்றே முத்திரை குத்தினர். ஆனால், அவரோ அந்த முத்திரைகளைப் பொய்யாக்கினார். திருத்தந்தை 2ம் ஜான்பாலைப் போலவே, இவரும் வறுமை, பட்டினி, சமூக அநீதி ஆகியவற்றைப் பற்றி துணிவுடன் பேசினார். இவர் ஐ.நா.பொது அவையில் (18 April, 2008) ஆற்றிய உரையைக் கேட்டேன். உலகில் நிலவும் பல பிரச்சனைகளின் ஆணிவேர்... மனித உயிர்களுக்கு நாம் வழங்க மறுக்கும் மதிப்பு என்றும், மனித மதிப்பும் மனித உரிமையும் நிலைநாட்டப்பட்டால, பல பிரச்சனைகள் தீரும் என்றும் அவர் சொன்னது என்னை அதிகம் கவர்ந்தது.
அவர் தன் உரைகளில் கடவுளைப்பற்றி பேசியபோது, அந்தக் கடவுளை நான் வெறுத்து ஒதுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே, கடவுள் மறுப்பாளி (Atheist) என்ற நிலையிலிருந்து பகுத்தறிவாளி (Agnostic) என்ற நிலைக்கு நான் மாறக் காரணம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களே! இன்று நான் கிறிஸ்துவ மறையில் ஒருவித ஈடுபாடு கொண்டிருப்பதற்குக் காரணம், இயேசு கிறிஸ்துவைப் பற்றி திருத்தந்தை கூறிய கருத்துக்களே" என்று திருத்தந்தையைப்பற்றி புகழ்ந்து பேசியுள்ள Raghuvanshi, அழுத்தந்திருத்தமாய் கூறிய ஒரு கருத்து இன்னும் என் மனதில் எதிரொலித்து வருகிறது: "மனிதம் எதிர்காலத்தில் வாழவேண்டுமெனில், ஆன்மீகத் தலைவரான இந்தத் திருத்தந்தை சொல்லித்தந்த பாடங்களை இவ்வுலகம் கேட்பது மிகவும் அவசியம்" என்று தன் பேட்டியில் கூறியுள்ளார்.

Raghuvanshiயின் கூற்றில் இருவருக்கு ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடுகிறார். இறைவனையும் மதத்தையும் ஒதுக்கி வாழ்ந்த தனக்குள் திருத்தந்தையின் உரைகள் உருவாக்கிய மாற்றங்களைக் குறிப்பிடுகிறார். அதேபோல், திருத்தந்தையிடமும் காணப்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடுகிறார். 16ம் பெனடிக்ட் அவர்கள் திருத்தந்தையாகப் பொறுப்பேற்பதற்கு முன், அவர் பழமை எண்ணங்களில் ஊறிப்போனவர் என்ற கருத்தே பரவலாக இருந்தது. தலைமைப் பொறுப்பில் இருந்தபோதும் இந்தக் கருத்து ஆழப்பட்டது.
எனவே, பிப்ரவரி 11ம் தேதி அவர் தன் தலைமைப் பொறுப்பைப்பற்றிய முடிவை வெளியிட்டதும், அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். பழமையில் ஊறிப்போய், பாரம்பரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவரா, 600 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்துள்ள ஒரு பாரம்பரியத்திலிருந்து விலகிச் சென்றார் என்பதே இந்த ஆச்சரியத்தின் அடிப்படைக் காரணம்.
பொதுவாகவே வயதானவர்களிடம் மாற்றங்களை எதிர்பார்ப்பது அரிது. 85 வயதைத் தாண்டிவிட்ட திருத்தந்தை தன் வாழ்வில் மட்டுமல்ல, திருஅவையின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை உருவாக்கியிருப்பது நமக்கு நல்ல பாடம். யாரும், எந்நிலையிலும், எந்நேரத்திலும் மாறக்கூடும் என்பது நாம் அனைவருமே கற்றுக்கொள்ளக் கூடிய, ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம். இது இப்படித்தான் அல்லது இவர் இப்படித்தான் என்று முற்சார்பு எண்ணங்களுடன் மனதையும், அறிவையும் மூடிவிடாமல் வாழ்வது நலமான மனநிலை என்பதை கடந்த இரு வாரங்களாய் நான் அடிக்கடி எண்ணிப் பார்க்கிறேன்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானிலிருந்து விடைபெற்றுச் செல்வது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்பதால், அதனைப் பதிவு செய்வதற்கு வத்திக்கான் தொலைக்காட்சி நிலையம், 26 ‘காமிரா’க்கள் கொண்டு பிப்ரவரி 27, 28 ஆகிய நாட்களை நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களை நமக்கு மட்டுமல்ல, அடுத்தத் தலைமுறைகளுக்கெனவும் பதிவு செய்கிறோம் என்று தொலைக்காட்சி நிலைய இயக்குனர் கூறியுள்ளார்.
வெளிப்புறமாக நடைபெறும் மாற்றங்களைப் பதிவு செய்யலாம் படங்களாய். ஆனால், உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள் என்ற அதிசயங்கள் வாழ்வில் பாதிப்புக்களை உருவாக்கும். அவ்வகையில், வரலாற்றில் பலருடைய வாழ்வில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மாற்றங்களை உருவாக்கலாம். இவை வெளியே விளம்பரப்படுத்தப்படாமல் நீண்ட கால தாக்கங்களை உருவாக்கலாம்.

திருத்தந்தை வத்திக்கானிலிருந்து விடைபெற்றதும் ஊடகங்கள் அடுத்த நிகழ்வுக்குத் தயாராகிவிடும். அதுதான், புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் Conclave எனப்படும் கர்தினால்கள் அவையின் துவக்கம். அந்த அவையில் நடப்பது வெளி உலகிற்குத் தெரியக்கூடாது என்பது திருஅவைச் சட்டம். இருந்தாலும், பரபரப்பை விரும்பும் ஊடகங்கள் அமைதிகாக்கப் போவதில்லை. ஏதோ ஒரு கதையை, நாடகத்தை அரங்கேற்றிய வண்ணம் இருக்கும்.

வெளி உலகின் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், திருஅவை வரலாற்றில் ஒரு புதிய பக்கம் அமைதியாகத் திருப்பப்படும்; அந்தப் புதியப் பக்கத்தில் தூய ஆவியாரின் நிழலாடுதல் முதலில் பதியவேண்டும் என்பதே இந்நாட்களில் நமது செபமாக அமையவேண்டும். படைப்பின் துவக்கத்தில் நீர்த்திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்ததால், உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன என்று நாம் தொடக்கநூலில் (தொ.நூ. 1: 2) வாசிக்கிறோம். அதேபோல், பிப்ரவரி 28ம் தேதிக்குப் பின், திருஅவை மீதும் தூய ஆவியாரின் அசைவுகளை நாம் அனுமதித்தால், திருஅவை தொடர்ந்து உயிர் வாழ முடியும். கிறிஸ்துவின் உயிர்ப்புக்குப் பின் மேலறையில் கூடியிருந்த சீடர்கள் மீது ஆவியார் இறங்கி வந்ததுபோல், வத்திக்கானில் கூடவிருக்கும் கர்தினால்கள் மீதும் ஆவியானவர் இறங்கி வரவேண்டும் என்றும் நாம் வேண்டுவோம்.

மாற்றங்கள் பலவற்றிற்கும் ஈடுகொடுத்து, திருஅவை வாழ்வு தொடரும். பிப்ரவரி 11ம் தேதி துவங்கி, புதியத் திருத்தந்தையின் அறிவிப்புநாள் முடிய உள்ள திருஅவை வரலாற்றின் ஒரு குறுகிய பகுதி, இயேசுவின் தோற்றம் மாறுதல் போல் கண்ணையும், கருத்தையும் கவரும் ஒரு காட்சியாக அமையலாம். ஆனால், சீடர்களும், இயேசுவும் பிரமிப்பை உருவாக்கிய தோற்றம் மாறுதல் என்ற காட்சியிலேயே சுகம்கண்டு தங்கிவிடாமல், உள்ளூர உருவான மாற்றங்களுடன் தங்கள் வாழ்வைத் தொடர்ந்ததுபோல், திருஅவையின் வாழ்வும் உண்மையான, உள்ளார்ந்த மாற்றங்களுடன் தொடரவேண்டும் என்று தூய ஆவியாரிடம் மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.