2013-02-22 15:48:03

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் செலவிடவிருக்கும் இறுதி நாட்கள்


பிப்.22,2013. திருஅவையின் தலைமைப் பொறுப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செலவிடவிருக்கும் இறுதி நாட்களைக் குறித்த விவரங்களை, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi செய்தியாளர்களிடம் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
தற்போது வத்திக்கான் அதிகாரிகளுடன் ஒரு வாரமாக தவக்கால தியானத்தில் ஈடுபட்டுள்ள திருத்தந்தை, இச்சனிக்கிழமையன்று தன்னுடன் தியானம் செய்வோருக்கு உரை ஒன்றை வழங்குவார் என்றும், அதன்பின் அதேநாள் அவர் இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களைச் சந்திப்பார் என்றும் அருள்தந்தை Lombardi அறிவித்தார்.
பிப்ரவரி 24, ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கும் இறுதி நண்பகல் மூவேளை செப உரை நிகழும். பிப்ரவரி 27, வருகிற புதனன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அவர் வழங்கும் இறுதி புதன் பொது மறைபோதகம் வழக்கமான மறைபோதக முறையிலேயே அமையும்.
திருத்தந்தை வத்திக்கானில் செலவிடும் இறுதி நாளான பிப்ரவரி 28, வியாழனன்று அவர் வத்திக்கானில் தற்போது தங்கியுள்ள கர்தினால்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பார் என்றும், அவர்களுக்கு உரை எதுவும் வழங்கப்போவதில்லை எனவும் அருள்தந்தை Lombardi தெளிவுபடுத்தினார்.
வியாழன் மாலை 5 மணிக்கு திருத்தந்தை காஸ்தல் கந்தோல்ஃபோவுக்குப் புறப்படுவார். அவரை அங்கு வரவேற்க அந்நகர மேயர் உட்பட பல உயர் அதிகாரிகள் காத்திருப்பர்.
பிப்ரவரி 28ம் தேதி இரவு எட்டு மணிக்கு திருஅவையின் தலைமைப் பீடம் காலியான பிறகு, கர்தினால்கள் கூடி Conclave என்ற சிறப்பு அவை துவங்கும் நாள் குறித்து தீர்மானம் செய்வர் என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Lombardi கூட்டத்தின் இறுதியில் தெளிவுபடுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.