2013-02-21 15:52:00

"அகில உலக தினை ஆண்டு" துவக்க விழா


பிப்.21,2013. உணவற்ற நிலையால் உருவாகும் நோய்கள், பட்டினி, வறுமை ஆகிய குறைகளை நீக்க தினை என்ற தானிய வகை முக்கிய பங்காற்ற முடியும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
"அகில உலக தினை ஆண்டு" என்ற பெயரில் இப்புதனன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற துவக்க விழாவில், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், பொலிவியாவின் அரசுத் தலைவர் Evo Morales, பெரு நாட்டின் அரசுத் தலைவரின் மனைவி Nadine Heredia Alarcón de Humala ஆகியோர் கலந்துகொண்டனர்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தினை, மக்களின் பசியைப் போக்கும் ஓர் எளிய, அதிக விலையற்ற தானிய வகை என்று FAO இயக்குனர் எடுத்துரைத்தார்.
4000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் அமெரிக்கப் பழங்குடியினர் மத்தியில் பழக்கத்தில் இருந்த இந்த தானிய வகையினால் மக்கள் மிகுந்த நலமுடன் வாழ்ந்தனர் என்ற வரலாற்று குறிப்புக்களும் இந்த விழாவில் கூறப்பட்டன.
பல்வேறு சுற்றுச்சூழலுக்கும், காலநிலை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து வளரக்கூடிய தானிய வகை தினையென்றும், தற்போது ஆப்ரிக்காவின் கென்யா, மாலி நாடுகளில் இதன் வளர்ச்சி நம்பிக்கை அளிக்கிறது என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
"அகில உலக தினை ஆண்டில்" தினையைப்பற்றிய பொதுஅறிவை வளர்க்கும்வண்ணம் கல்வி மற்றும் கலை வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று FAO இயக்குனர் Graziano da Silva அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.