2013-02-20 15:23:19

பிப்.21. கற்றனைத்தூறும்...... நில அதிர்வும் மிருகங்களும்


நிலநடுக்கம் அல்லது பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தவல்லன.
பூகம்பம் வருவதற்கு முன் நம்மால் உணரவல்ல அறிகுறிகளாக மிருக ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவெனில்,
நில நடுக்கம் ஏற்படுவதற்கு பல நாள்களுக்கு முன்னதாகவே எறும்புகள் சாரை சாரையாகச் சென்று உணவை சேமித்து வைக்கும், வளை தோண்டி பொந்துகளில் வசிக்கும் எலி, மூஞ்சூறு, பாம்பு, தவளை போன்ற விலங்குகள் வளையை விட்டு வெளியேறிவிடும், மீன்கள் தண்ணீரின் மேல் மட்டத்துக்கு வந்து கண்டபடி ஓடும்; எகிறிக் குதிக்கும் என்கின்றனர்.
மேலும், மூஞ்சூறுகள் மது அருந்தியதைப் போன்று தள்ளாடும், வலிப்பு வந்ததைப் போல உடலை முறுக்கிக் கொள்ளும், பன்றிகள் அலையும், அடுத்த பன்றிகளின் வாலைக் கடிக்கும், பூனைகள் குறுக்கு நெடுக்காக ஓடும், நாய்கள் இருப்புக் கொள்ளாமல் ஊளையிடும், தரையை பரபரப்பாக சுரண்டும், ஓர் இடத்தில் நிற்காமல் முன்னும் பின்னுமாகத் திரியும், பழகியவர்களைப் பார்த்ததும் ஓடிவந்து ஒட்டிக்கொண்டு நகராமல் முரண்டு பிடிக்கும் என்றும் கூறுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.