2013-02-20 15:48:05

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் போராடும் திருஅவைக்கென தொடர்ந்து செபித்து வருவார் - கர்தினால் ரவாசி


பிப்.20,2013. இஸ்ரயேல் மக்கள் போரில் ஈடுபட்டிருந்தபோது அவர்களின் தலைவர் மோசே மலைமீது கரங்களை விரித்து செபித்ததைப் போல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும் போராடும் திருஅவைக்கென தொடர்ந்து செபித்து வருவார் என்று கர்தினால் ஜியான்ப்ராங்கோ ரவாசி கூறினார்.
கடந்த ஞாயிறு மாலை முதல் வத்திக்கானில் உள்ள அனைத்து அதிகாரிகளும் திருத்தந்தையுடன் இணைந்து தவக்கால தியானத்தைத் துவக்கியபோது, அவர்களுக்கு துவக்க உரையாற்றிய கர்தினால் ரவாசி இவ்வாறு கூறினார்.
“திருப்பாடல் செபங்களில் இறைவனின் முகமும், மனிதரின் முகமும்” என்ற தலைப்பில் இவ்வாண்டு தியானத்தை வழங்கிவரும் கர்தினால் ரவாசி, ஆன்மீகப் பயிற்சிகள் என்று அழைக்கப்படும் தியானங்கள், படைப்பாற்றல் மிக்க பயிற்சிகளாகவும் அமையவேண்டும் என்று கூறினார்.
ஆன்மீகப் பயிற்சிகளின்போது ஒருவர் தன் ஆன்மாவை ஆய்வுசெய்து அங்குள்ள முறைகேடான ஈர்ப்புக்களைச் சரிசெய்யவேண்டும் என்று புனித லயோலா இஞ்ஞாசியார் கூறியதை கர்தினால் ரவாசி இத்தியானத்தின் துவக்கத்தில் எடுத்துரைத்தார்.
செபத்தில் அமைந்துள்ள நான்கு செயல்பாடுகளான சுவாசித்தல், எண்ணுதல், போரிடுதல், அன்புசெய்தல் என்பனவற்றைக் குறித்து கர்தினால் ரவாசி தன் உரையில் விளக்கினார். திருத்தந்தையும் வத்திக்கான் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ள இந்த ஆன்மீகப் பயிற்சிகள் வருகிற ஞாயிறு காலை நிறைவுறும்.








All the contents on this site are copyrighted ©.