2013-02-19 14:53:22

விவிலியத்
தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 2


RealAudioMP3 மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்ற நற்செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு தனிப்பட்டச் சிறப்பு அம்சத்தைக் கொண்டுள்ளன. லூக்கா நற்செய்தியை, 'பரிவு நற்செய்தி' (Gospel of Compassion) என்று விவிலிய விளக்கங்களில் குறிப்பிடுகின்றனர். இயேசுவின் மனித இயல்பை, சிறப்பாக, அவரது பரிவன்பை வெளிப்படுத்தும் சொற்களையும், புதுமைகளையும் திரட்டித் தருவதில் லூக்கா தனிப்பட்ட கவனம் செலுத்தியுள்ளார்.
லூக்கா நற்செய்தியின் மற்றொரு தனித்துவமான பண்பு... அவர் பெண்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவம். இவரது நற்செய்தியில் பெண்களை மையப்படுத்திய பல நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இத்தகையச் சிறப்பு அம்சங்களைக் கொண்ட லூக்கா நற்செய்தியில், கதைவடிவில் அமைந்துள்ள இயேசுவின் உவமைகள், மிக உயர்ந்த மனிதப் பண்புகளை வெளிப்படுத்துவதில் வியப்பொன்றுமில்லை.

தேவையில் இருக்கும் ஒருமனிதருக்கு, மற்றொருவர் உதவி செய்வது, அடிப்படையான மனிதப் பண்பு... அடிக்கடி காணமற்போகும் மனிதப் பண்பும் இதுதான். பிறரன்பைக் குறித்த உண்மைகளைக் கடந்த 20 நூற்றாண்டுகளாக மனித சமுதாயத்தின் மீது ஆழமாகப் பதித்துவரும் அற்புத உவமை 'நல்ல சமாரியர்' உவமை.
இந்த உவமைக் கடலுக்குள் காலடி எடுத்துவைப்பதற்குமுன், இதன் கரையில் நாம் திரட்டக்கூடிய செல்வங்களைத் தேடுவோம். முதலில், லூக்கா நற்செய்தியின் பொதுவான அமைப்பைத் தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும். 24 பிரிவுகளைக் கொண்ட லூக்கா நற்செய்தி 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. அர்ப்பணம் 1:1-4
2. குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள் 1:5 - 2:52
3. திருப்பணிக்குத் தயார் செய்தல் 3:1 - 4:13
4. கலிலேயப் பணி 4:14 - 9:50
5. எருசலேம் நோக்கிப் பயணம் 9:51 - 19:27
6. எருசலேம் பணி 19:28 - 21:38
7. இயேசு துன்புற்று இறந்து உயிர்தெழுதலும் விண்ணேற்றமடைதலும் 22 - 24
என்பன இந்த ஏழு பகுதிகள்.

இவ்வேழு பகுதிகளிலும் 'எருசலேம் நோக்கிப் பயணம்' என்ற பகுதிதான் பத்து பிரிவுகளைக் கொண்ட நீளமான பகுதி. இப்பகுதியில்தான் இயேசு கூறிய புகழ்பெற்ற உவமைகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. எருசலேம் நோக்கி இயேசு மேற்கொண்ட பயணத்தை நற்செய்தியாளர் லூக்கா இவ்வாறு ஆரம்பிக்கிறார்:
லூக்கா 9: 51-56
இயேசு... எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
பயணத்தின் ஆரம்பத்திலேயே இயேசு எதிர்ப்பைச் சந்திக்கிறார். அவர் சமாரியர்களின் ஊரில் வரவேற்கப்படவில்லை என்பதை நாம் அறிகிறோம். அவர்கள் காட்டிய பகைமை உணர்வுகளுக்கு இயேசு தந்த பதில் என்ன? தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பில், 'நல்ல சமாரியர்' என்ற உவமையைக் கூறி, சமாரியர் என்றால் 'அன்பின் இலக்கணம்' என்ற புகழ்மாலையை அவர்களுக்குச் சூட்டியுள்ளார் இயேசு. இந்த உவமைக் கடலின் கரையில் நின்றபடி நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடம் இது.

அடுத்ததாக, இயேசு இந்த உவமையைச் சொல்லத் தூண்டுதலாக அமைந்தச் சூழலை அலசிப் பார்ப்போம். லூக்கா நற்செய்தி 10ம் பிரிவில் இச்சூழல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
லூக்கா 10: 25
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?”என்று கேட்டார்.

இவ்வரிகளை நான் இதுவரை பலமுறை வாசித்திருக்கிறேன். ஆனால், நமது விவிலியத் தேடலுக்காக இதை அண்மையில் வாசித்தபோது, இதுவரை நான் எண்ணிப்பார்க்காத ஒரு புதிய எண்ணம் முதல் வரியிலேயே மனதில் பளிச்சிட்டது. இந்த இறைச் சொற்றொடரில், "திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து" என்று வாசித்தபோது, 'எழுந்து' என்ற வார்த்தை என் கவனத்தை ஈர்த்தது.

'எழுந்து' என்றால், அந்தத் திருச்சட்ட அறிஞர் அங்கு அமர்ந்திருந்தார் என்று பொருள் கொள்ளலாம். அவர் திடீரென அங்கு 'வந்து' இயேசுவிடம் கேள்வியைத் தொடுக்கவில்லை. அவர் அங்கு அமர்ந்திருந்தார். இயேசு அதுவரைக் பேசியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தார். இயேசு அதுவரை என்ன பேசிக் கொண்டிருந்தார்? என்ற கேள்வி எழுகிறது.

உங்களிடம் விவிலியம் கைவசம் இருந்தால், லூக்கா நற்செய்தி 10ம் பிரிவைத் திறந்து பாருங்கள். இந்த உவமையின் சூழலை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். லூக்கா நற்செய்தி 10ம் பிரிவின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருக்கும் வார்த்தைகள் இவைதாம்:
லூக்கா 10: 1
"இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்."
இயேசு அனுப்பிய இந்த 72 பேரும், அவர் சொன்னபடி பணிகளைச் செய்துமுடித்தபின், நிலைகொள்ளா மகிழ்வுடன் திரும்பி வந்தனர். இந்தக் காட்சியை, தற்காலச் சூழலுக்கு ஏற்ப இவ்விதம் நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

பள்ளியில் தான் அடைந்த வெற்றியால் தலைகால் புரியாத மகிழ்வோடு வீட்டுக்குள் வரும் ஒரு மகளையோ, மகனையோ கற்பனை செய்து பார்ப்போம். "அம்மா... அம்மா..." என்று உரத்தக் குரலில் கத்திக்கொண்டு வரும் மகள், தனக்குக் கிடைத்த வெற்றியைப் பற்றி துடிப்புடன் சொல்லிமுடித்ததும், அன்னை தன் மகளை ஆரத்தழுவி, நெற்றியில் முத்தமிடுகிறார். பின்னர், அந்த பரபரப்பெல்லாம் குறைந்தபின், அன்றிரவோ அல்லது அடுத்த நாட்களிலோ, நல்லதொரு தருணம் பார்த்து, அம்மா மகளிடம், "மகளே, இந்த வெற்றியால் நீ அதிகம் பெருமை கொள்ளாதே. அது உனக்கு ஆபத்து... இதற்கு மெலான பெருமைகள் உனக்குக் காத்திருக்கின்றன" எனப் பக்குவமாக எடுத்துச்சொல்ல வேண்டும். அது பெற்றோரின் கடமை. இதைத்தான் இயேசு அன்று செய்தார்.

தங்கள் பணியில் ஏற்பட்ட வெற்றி, அதிலும் சிறப்பாக, பேய்கள் கூட தங்கள் சொல்லுக்குப் பணிந்தன என்ற வெற்றியைக் கொண்டாட ஓடி வந்த சீடர்களுக்கும், இயேசுவுக்கும் இடையே நடந்ததை லூக்கா இவ்விதம் விளக்குகிறார்:
லூக்கா 10: 17-20
பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றனஎன்றனர். அதற்கு அவர், “வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்என்றார்.

72 சீடர்களும் இயேசுவைத் தேடி ஓடி வந்தபோது இயேசு ஏற்கனவே மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று யூகித்துக் கொள்ளலாம். அக்கூட்டத்தில் தங்கள் பெருமைகளைச் சீடர்கள் அடுக்கிக் கொண்டே சென்றபோது, இயேசு, அக்கூட்டத்தின் முன்னிலையிலேயே தன் சீடர்களுக்குப் பணிவுப் பாடங்களைச் சொல்லித் தருகிறார். பின்னர், இதே பாடங்களை, சூழ இருந்த மக்களுக்கும் இயேசு எடுத்துக் கூறுகிறார். இச்சொற்களை அவர் தூய ஆவியாரின் தூண்டுதலோடு கூறினார் என்று லூக்கா நற்செய்தி குறிப்பிடுகிறது:
லூக்கா 10: 21
அந்நேரத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்என்றார்.

இயேசுவுக்கும் 72 சீடர்களுக்கும் நடந்த உரையாடலையும், அதற்குப் பின் மக்களிடம் இயேசு கூறியதையும் கேட்டபடி அங்கு அமர்ந்திருந்தார் திருச்சட்ட அறிஞர். பொங்கிவரும் பாலில் நீரைத் தெளிப்பதுபோல், வெற்றியைக் கொண்டாடவந்த சீடர்களிடம் இயேசு கூறிய வார்த்தைகளால் திருச்சட்ட அறிஞரின் பெருமை காயப்பட்டிருக்கலாம். எனவே அவர் எழுந்தார்... தன் அறிவுத்திறனை அக்கூட்டத்தில் நிலைநாட்டவும், அதே நேரம், இயேசுவுக்குச் சவால் விடுக்கும் விதமாகவும் அவர் தன் கேள்வியைத் தொடுத்தார். போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?”

திருச்சட்ட அறிஞரின் கேள்வி, ஒரு தேடலால் எழுந்த கேள்வி அல்ல. பதிலைத் தெரிந்துவைத்துக்கொண்டு கேள்வி கேட்பவர்களை நாம் சந்தித்திருக்கிறோம். இதுபோன்ற ஒரு நிகழ்வு பொதுவாக ஒரு கூட்டத்தில் நிகழும். அக்கூட்டத்தில் தலைவராக இருப்பவர் பேசிக் கொண்டிருக்கும்போது, இதுபோன்ற கேள்விகளை மறைமுகமான நோக்கங்களுடன் கேட்பவர்கள் உண்டு. தனக்குத் தெரிந்தது தலைவனுக்கும் தெரிந்திருக்குமா என்பதைச் சோதிக்க கேட்கப்படும் கேள்வி இது. கூட்டத்தின் நடுவில் இத்தகைய ஒரு கேள்வி கேட்பதால், தலைவனின் அறியாமையை மக்கள்முன் வெளிச்சம் போட்டுக் காட்டலாம். அதேநேரம், தன்னுடைய அறிவுத்திறனையும் மக்கள் முன் விளம்பரப்படுத்தலாம்.
குழந்தை மனம் கொண்டு, தாழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று இயேசு வலியுறுத்திக் கூறிய அறிவுரைகளால் காயப்பட்டுப் போன பெருமையுடன், திருச்சட்ட அறிஞர் எழுந்து இயேசுவிடம் கேள்வியைத் தொடுத்தார். இயேசுவை மடக்கி, தன் அறிவுத் திறமையையும், பெருமையையும் மக்கள் முன் நிலைநாட்டத் துடித்தார். திருச்சட்ட அறிஞருக்கும் இயேசுவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் நம் அடுத்தத் தேடலைத் தொடர்வோம்.








All the contents on this site are copyrighted ©.