2013-02-19 15:25:56

தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிரானப் பாகுபாடுகள் அகற்றப்படுவதற்கு 10 இலட்சம் அஞ்சல் அட்டைகள்


பிப்.19,2013. இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பாகுபாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி 10 இலட்சம் அஞ்சல் அட்டைகள் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர் இந்தியக் கிறிஸ்தவர்கள்.
இந்திய தேசிய கிறிஸ்தவ சபைகளின் அவை, இந்திய தலித் கிறிஸ்தவர்கள் அவை ஆகியவற்றுடன் இணைந்து இந்திய ஆயர் பேரவை தொடங்கியுள்ள இந்தப் புதிய திட்டம் குறித்துப் பேசிய, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் ஆயர் நீதிநாதன் அந்தோணிசாமி, இவ்விவகாரம் குறித்து மத்திய அரசிடமிருந்து திட்டவட்டமான பதிலை வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
தலித் கிறிஸ்தவர்கள் குறித்த விவகாரம் இந்திய உச்சநீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது, இந்த விவகாரம் கடந்த சனவரி 11ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது, அது வருகிற மார்ச் 4ம் தேதியன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்பதால், அரசிடமிருந்து ஒரு முடிவை எதிர்பார்க்கிறோம் என்றும் ஆயர் மேலும் கூறினார்.
மேலும், இந்தத் திட்டம் குறித்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையச் செயலர் அருள்பணி தேவசகாயராஜ், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 அஞ்சல் அட்டைகள் வீதம் தபாலில் அனுப்பப்படும், இவ்வாறு 10 இலட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்படும் எனத் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.