2013-02-19 15:33:54

இலங்கையின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்படுமாறு கிறிஸ்தவக் குருக்கள் ஐ.நா.விடம் கோரிக்கை


பிப்.19,2013. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்றதாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு, ஒரு தனிப்பட்ட அனைத்துலக விசாரணைக் குழு உருவாக்கப்படுமாறு, இலங்கையின் வடபகுதி கிறிஸ்தவக் குருக்கள், ஐ.நா. மனித உரிமைகள் அவையைக் கேட்டுள்ளனர்.
இலங்கையின் கத்தோலிக்க, ஆங்லிக்கன் மற்றும் மெத்தோடிஸ்ட் கிறிஸ்தவ சபைகளின் 133 குருக்கள் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையில், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22வது அமர்வில் உறுதியான செயல்திட்டத்தை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுமாறு கேட்கப்பட்டுள்ளது.
போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கு இலங்கை அரசுக்கு விருப்பம் இல்லை என்றும், உள்நாட்டுப் போரின்போது அனைத்துலக விதிகள் மீறப்பட்டதை விசாரிப்பதற்கு ஒரு தனிப்பட்ட அனைத்துலக விசாரணைக் குழு தேவை என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22வது அமர்வு, இம்மாதம் 25 முதல் மார்ச் 22 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.