2013-02-16 14:36:43

தவக்காலம் - முதல் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 பிப்ரவரி 11, கடந்த திங்களன்று காலை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அறிவித்த ஒரு முடிவை இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையப்பொருளாக எண்ணிப்பார்க்க உங்களை அழைக்கிறேன். இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சந்தித்த சோதனைகளைப் பற்றி சிந்திக்க, திருஅவை நமக்கு வாய்ப்பளிக்கிறது. உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் சந்திக்கும் ஓர் அனுபவம்... சோதனை. இயேசுவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த அடிப்படை அனுபவத்தை இயேசுவும் சந்தித்தார் என்ற எண்ணமே, அவரை நம்மில் ஒருவராகப் பார்க்க உதவுகிறது. அதேபோல், திருத்தந்தையின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவரும் ஒரு மனிதப் பிறவிதான் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. திருத்தந்தையின் இந்த அறிவிப்புக்கும், இன்றைய ஞாயிறு வாசகங்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லையெனினும், திருஅவை வரலாற்றின் ஒரு முக்கிய நிகழ்வாக இது இருப்பதால், இதனை அலசிப்பார்ப்பது பயனளிக்கும்.

திருத்தந்தையின் அறிவிப்பு எனக்குள் எழுப்பிய கேள்விகளிலிருந்து நம் சிந்தனைகளை ஆரம்பிப்போம். பிப்ரவரி 11ம் தேதி இச்செய்தி வெளியானதும், என் மனதில் எழுந்த முதல் கேள்விகள்: "அப்படியா? உண்மையாகவா?" எதிர்பாராத நேரத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வந்த செய்தி என்பதால், இந்த ஆச்சரியக் கேள்விகள் முதலில் எழுந்தன. இவற்றைத் தொடர்ந்த மற்றொரு கேள்வி இன்றும் அவ்வப்போது எனக்குள் விழித்தெழுகிறது. அதுதான் 'ஏன்' என்ற கேள்வி. திருத்தந்தை ஏன் இந்த முடிவெடுத்தார்? இந்தக் கேள்விக்கு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பிப்ரவரி 11ம் தேதி உரோம் நேரம் 11 மணியளவில் தெளிவாகப் பதிலளித்துவிட்டார்.

இதோ, திருத்தந்தை தன் சகோதரக் கர்தினால்கள் முன் இலத்தீன் மொழியில் வாசித்த அறிக்கையின் தமிழாக்கம்:
அன்பு சகோதரர்களே,
மூன்று புனிதர்பட்ட நிலைகளைக் குறித்து விவாதிப்பதற்காக மட்டும் நான் இந்த கர்தினால்கள் கூட்டத்திற்கு உங்களை அழைக்கவில்லை, திருஅவையின் வாழ்விற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை அறிவிக்கவுமே உங்களை அழைத்தேன். இறைவனின் முன் என் மனச்சான்றை மீண்டும் மீண்டும் ஆய்வுசெய்து, நான் ஓர் உறுதியான முடிவுக்கு வந்துள்ளேன். அதாவது, என் முதுமையின் காரணமாக, என் சக்திகள், பேதுருவின் வழித்தோன்றலுக்குரிய பணிகளை ஏற்று நடத்துவதற்கு உகந்தனவாக இல்லை.
அடிப்படையில் இப்பணி ஓர் ஆன்மீகப் பணி என்பதையும், சொல்லாலும், செயலாலும் மட்டுமல்ல, மாறாக, செபத்தாலும், துன்பங்களாலும் ஆற்றவேண்டியது இப்பணி என்பதையும் நான் நன்கு உணர்ந்துள்ளேன்.
இருப்பினும், வேகமான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு, அதேநேரம், விசுவாச வாழ்வின் தேவை குறித்து எழும்பும் ஆழமான கேள்விகளால் அதிர்வுற்றிருக்கும் இன்றைய உலகில், புனித பேதுருவின் படகை நடத்திச்செல்லவும், நற்செய்தியைப் பறைசாற்றவும், சிந்தனையளவிலும், உடலளவிலும் சக்தி தேவை. கடந்த சில மாதங்களாக இந்தச் சக்தி எனக்குள் குறைந்து போனதை உணர்ந்து,, என்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட இப்பணியைச் செய்ய இயலாமையை நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளேன். இக்காரணத்திற்காக, அதேவேளை இச்செயல்பாட்டின் தீவிரத்தை உணர்ந்துள்ள நிலையில், தூய பேதுருவின் வழிவந்தவரான உரோமை ஆயர் பணியிலிருந்து விலகுவதாக முழு சுதந்திரத்துடன் அறிவிக்கிறேன்.
கர்தினால்களால் 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் என்வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து 2013ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி இரவு எட்டு மணிக்கு நான் விலகுவதால், தூய பேதுருவின் திருப்பீடமாகிய உரோமை திருப்பீடம் காலியாக இருக்கும். அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பிலுள்ளோர் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் அவையைக் கூட்டுவர்.
அன்புச் சகோதரர்களே, என்னுடைய மேய்ப்புப்பணியில் அன்பு மற்றும் பணிகள் மூலம் எனக்கு வழங்கிய ஆதரவிற்கு நன்றி கூறுவதோடு, என்னுடைய குறைபாடுகளுக்காக மன்னிப்பையும் வேண்டுகிறேன். நாம் இப்போது நம் புனிதத் திருஅவையை உன்னத மேய்ப்பராம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வசம் ஒப்படைத்து, அதேவேளை, புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதில் திருஅவைத் தந்தையர்களாம் கர்தினால்களுக்கு ஒரு தாய்க்குரிய ஆலோசனைகளை வழங்கி உதவுமாறு ஆண்டவரின் தாயாம் அன்னைமரி நோக்கி இறைஞ்சுவோம். என்னைப் பொருத்தவரையில், செபத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்வு மூலம் வருங்காலத்தில் திருஅவைக்குச் சேவையாற்ற ஆவல் கொள்கின்றேன்.

வத்திக்கானிலிருந்து, 10 பிப்ரவரி 2013.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தை ஏன் இந்த முடிவெடுத்தார்? என்ற கேள்விக்கு அவர் தந்த பதில் தெளிவாக இருந்தது. சவால்கள் நிறைந்த இவ்வுலக நிலை, தனக்கு அளிக்கப்பட்ட பணியின் முக்கியத்துவம், இவ்விரு உண்மைகளுக்கும் ஈடுகொடுக்க இயலாத தன் உடல், மன வலுக்குறைவு என்பனவற்றை அவர் தெளிவுபடுத்தினார். இறைவேண்டலுக்குப்பின், முழு மன சுதந்திரத்துடன் இப்பொறுப்பிலிருந்து விலகுவதாக தான் எடுத்த முடிவை அறிவித்தார்.
இது நடந்து தற்போது ஆறுநாட்கள் முடிவுற்ற நிலையிலும், ஊடகத்துறையினர் திருத்தந்தையின் இந்த முடிவுக்கு இன்னும் காரணங்களைத் தேடி வருகின்றனர். அவரது எட்டாண்டுகள் தலைமைப் பொறுப்பு காலத்தையும், அதற்கு முந்திய அவரது வாழ்வையையும் புரட்டி எடுத்து காரணங்களைத் தேடி வருகின்றனர். அது மட்டுமல்ல, இந்த முடிவு அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 11ம் தேதி மாலை, உரோம் நகரில் பெய்த மழையின்போது, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தின் கோபுரத்தைத் தாக்கிய ஒரு மின்னலைப் பற்றியும் ஊடகங்கள் பேசின. ஊடக உலகம் இன்னும் ஒரு மாதம் வத்திக்கானை வட்டமிட்டு, விறுவிறுப்பானத் தகவல்களைத் தந்தவண்ணம் இருக்கும்.

ஊடகங்கள் இவ்விதம்தான் நடந்துகொள்ளும் என்பதை ஓரளவு அறிந்தவன் என்றாலும், இந்த நிகழ்வையும் ஏனைய உலக நிகழ்வுகள் போல் ஊடகங்கள் ஏன் நடத்துகின்றன என்ற கேள்வியோடும் நான் போராடி வருகிறேன். இந்தப் போக்கில் ஊடகங்கள் வளர்வதற்கு காரணம் நாம்தானோ என்ற நெருடல் எனக்குள்... விறுவிறுப்பு என்ற பெயரில் தேவையற்ற தகவல்களில் நம்மையே மூழ்கடித்துக் கொள்ளும் பழக்கம் நம்மிடையே வளர்ந்திருப்பதால், நமது தேவையற்ற ஆர்வத்திற்குத் தீனி போடும் வகையில், விறுவிறுப்பை ஊட்டிவருகின்றன இந்த ஊடகங்கள். அடுத்தவர்களைப் பற்றி விறுவிறுப்பானத் தகவல்களைத் திரட்ட விழையும் சோதனைகளை நாம் எப்போது வெல்லப்போகிறோம்?

திருத்தந்தையின் முடிவு வெளியானதும், ஆச்சரியம், ஆர்வம் காரணமாக எழுந்த கேள்விகள் அடங்கியதும், திருஅவைத் தலைவர் பொறுப்பைப்பற்றி புரிந்துகொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டேன். இம்முடிவைக்குறித்து, பல சமயத்தலைவர்களும், அரசுத்தலைவர்களும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் ஒன்று என் கவனத்தைக் கவர்ந்தது.

ஆங்கிலிக்கன் சபையின் தலைவராகவும், Canterbury பேராயராகவும் பத்தாண்டுகள் பணிபுரிந்த பேராயர் Rowan Williams, 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தன் பொறுப்பிலிருந்து விலகினார். இவர் பொறுப்பிலிருந்து விலகுவதற்குமுன், தன் முடிவைப்பற்றி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களிடம் பேசியதாகக் கூறியுள்ளார். திருத்தந்தையின் இம்முடிவைப்பற்றி இவரிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது:

"திருத்தந்தையின் இம்முடிவைக் கேட்டு நான் அதிகம் ஆச்சரியம் அடையவில்லை. இம்முடிவால், திருஅவையின் தலைவர் என்ற பொறுப்பைச் சுற்றியுள்ள ஒரு மூடுபனி விலகியுள்ளதுபோல் தோன்றுகிறது. தன்னையே கடவுள் என்று அறிவித்து, இறக்கும்வரை அரியணையிலேயே வீற்றிருந்த மன்னர்களைப்போல் திருத்தந்தையின் நிலை அல்ல என்ற தெளிவை இம்முடிவு தருகிறது. உரோம் நகரின் ஆயர் என்ற நிலை ஒரு பணியேயன்றி, அதிகாரப் பதவி அல்ல என்பதையும் திருத்தந்தையின் முடிவு தெளிவுபடுத்தியுள்ளது."

(“It wasn’t a total surprise, I think because in our last conversation I was very conscious that he was recognising his own frailty and it did cross my mind to wonder whether this was a step he might think about….. it does seem to me that an act like this does something to, as you might put it, demystify the papacy, the pope is not like a sort of God King who goes on to the very end. The ministry of service that the Bishop of Rome exercises is just that, a ministry of service and it’s therefore reasonable to ask if there is a moment when somebody else should take that baton in hand.”)

பேராயர் Rowan Williams அவர்களின் எண்ணங்களை வாசித்தபோது, எனக்குள் நல்ல பல மாற்றங்கள் உருவானதை உணர்ந்தேன். திருஅவையின் தலைமைப்பொறுப்பு என்ற நிலை ஏதொ எட்டமுடியாத உயரத்தில் உள்ள ஒரு நிலை அல்ல என்பதே மகிழ்வைத் தந்தது. திருத்தந்தையாக இதுவரைப் பொறுப்பேற்றவர்கள், இனியும் பொறுப்பேற்பவர்கள் அனைவருமே சராசரி மனிதர்கள், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்பும் பணியேயன்றி பதவி அல்ல போன்ற எண்ணங்கள் பெருமளவு மனச் சுதந்திரத்தை வழங்கியதாக உணர்ந்தேன்.

திருத்தந்தையர்களை, புனித பேதுருவின் வழித் தோன்றல்கள் என்று அழைக்கிறோம். புனித பேதுரு, எளிய மீன்பிடித் தொழிலாளி. அந்த எளியத் தொழிலாளியை, திருஅவையின் முதல் தலைவராக நாம் மதிக்கிறோம். வருகிற மார்ச் மாதம் கர்தினால்களின் சிறப்பான அவையான 'Conclave' கூடும்போது, புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பார்கள். யாரைத் திருத்தந்தையாகத் தேர்ந்தேடுக்கமுடியும் என்பதைச் சிந்திக்கும்போது, மற்றொரு ஆச்சரியம் நமக்காகக் காத்திருக்கிறது. எந்த ஒரு மனிதரையும் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கலாம். ஆம்... ஒரு கர்தினாலாகவோ, ஆயராகவோ, ஏன் ஒரு குருவாகவோகூட இல்லாத ஒருவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படலாம். இதற்கு எவ்விதத் தடையும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர், தலைமைப்பொறுப்பை ஏற்பதற்கு முன், ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட வேண்டும்... ஏட்டளவில் இவ்விதம் சொல்லப்பட்டிருந்தாலும், இன்றையச் சூழலில் இது நடக்கமுடியாத ஒரு காரியம் என்பதை நாம் அறிவோம். இருந்தாலும், இத்தகைய எண்ணங்களை நாம் சிந்திக்க, அதைப்பற்றி பேச திருத்தந்தையின் அண்மைய முடிவு ஒரு வாய்ப்பளித்துள்ளது.

பதவி, உயர்நிலை ஆகியவற்றைக் குறித்து சோதனைகள் எழுந்தபோது, இயேசு அவற்றை எவ்விதம் வெற்றிகண்டார் என்பது இன்றைய நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. இத்தருணத்தில், திருஅவையின் பொறுப்புக்கள் நிரந்தரப் பதவிகள் அல்ல, காலத்தின் சவால்களுக்கு ஈடுகொடுத்துச் செல்லும் பணிகளே என்ற வழிகளில் நம்மைச் சிந்திக்கத் தூண்டிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் முடிவுக்கு நன்றி சொல்லவேண்டும்.
பதவி, புகழ், மக்கள் மத்தியில் பிரபலம் அடைதல், அதுவும், குறுக்கு வழிகளில் விரைவாக உச்சநிலைகளை அடைதல் போன்ற சோதனைகளை நாம் அனைவருமே சந்திக்கிறோம். மிக, மிக உயர்நிலையில் இருப்பவர்கள் இச்சோதனைகளுக்குத் தங்களையே பலியாக்கியுள்ளதை வரலாற்றிலும், நாம் வாழும் நாட்களிலும் கண்டுவருகிறோம். சீடர்களின் பாதங்களைக் கழுவியதன் வழியாக, இறைமகன் இயேசு நமக்கு விட்டுச் சென்றுள்ள பணி தலைமைத்துவம் (Servant Leadership) என்பதை மீண்டும் நமக்கு நினைவுறுத்தும் வண்ணம் அமைந்துள்ள திருத்தந்தையின் அறிவிப்பு நம் அனைவரையும் ஓர் ஆன்மச் சோதனைக்கு அழைக்கிறது.

சமயத் தலைவர்களானாலும் சரி, உலகத் தலைவர்களானாலும் சரி, அனைவருமே தலைமைப் பொறுப்பை ஒரு பணியாக ஏற்று செயல்பட்டால் இவ்வுலகின் பாதி பிரச்சனைகள் தீரும் என்பது உறுதி. அவ்வகை மனநிலையை நம் தலைவர்கள் அனைவருமே வளர்த்துக்கொள்ள இந்த தவக்காலத்தில் சிறப்பான வரங்களை வேண்டுவோம்.
மார்ச் மாதம் ஆரம்பமாகும் Conclave கர்தினால்கள் அவை, தகுதியான ஒரு பணியாளரைத் திருஅவையின் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்ந்தேடுக்க வேண்டுமென்று இறைவனிடம் தனிப்பட்ட முறையில் செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.