2013-02-14 16:24:56

மார்ச் மாதத்தின் மத்தியில் Conclave என்று சொல்லப்படும் கர்தினால்கள் அவை இடம்பெறலாம் - திருப்பீடப் பேச்சாளர்


பிப்.14,2013. திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்காக சேர்ந்துவரும் Conclave என்று சொல்லப்படும் கர்தினால்கள் அவை, மார்ச் மாதத்தின் மத்தியில் இடம்பெறலாம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
இப்புதனன்று செய்தியாளர்களைச் சந்தித்த இயேசு சபை அருள்தந்தை Lombardi, கர்தினால்களின் இச்சிறப்புக் கூட்டம்பற்றி குறிப்பிடுகையில், இந்த முடிவு கர்தினால்களின் கையில் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
Conclave குறித்து திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், மற்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இருவரும் ஒப்புதல் அளித்த திருஅவை சட்டத் திருத்தங்களின்படி, திருஅவையின் தலைமைப் பொறுப்பு காலியாவதைத் தொடர்ந்து 15 நாட்கள் கழித்து Conclave கூடவேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கர்தினால்கள் வத்திக்கானில் கூடுவதற்கு ஏற்றவகையில் இந்த 15 நாட்கள் காலஅளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 15ம் தேதியையொட்டி நடைபெறவிருக்கும் Conclave கூட்டத்தில், 117 கர்தினால்கள் பங்கேற்பர். இவர்களில் 67 பேர் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் கர்தினால்களாக உயர்த்தப்பட்டவர்கள்.
1978ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களைத் தேர்ந்தெடுத்த Conclave, 3 நாட்கள் நடைபெற்றது என்பதும், 2005ம் ஆண்டு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் தேர்ந்தெடுத்த Conclave, 2 நாட்களே நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.