2013-02-14 15:50:48

கற்றனைத்தூறும்... அனைத்துலக மால்ட்டா பிறரன்பு அமைப்பு (The Knights of Malta)


மத்திய காலத்தில் திருஅவையில் உருவான பொதுநிலையினர் அமைப்புக்களில் இன்றும் விறுவிறுப்புடன் செயல்பட்டு வரும் சில அமைப்புக்களில் The Knights of Malta என்ற அனைத்துலக பிறரன்பு அமைப்பும் ஒன்றாகும். புனித பூமியை முஸ்லீம்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட சிலுவைப்போர் வீரர்கள் அமைப்பு உருவாகுவதற்கு முன்பே இந்த Knights of Malta அமைப்பு உருவானது. இந்த Knights of Malta அமைப்பு, 1309ம் ஆண்டுவரை, எருசலேம் Hospitallers என அழைக்கப்பட்டது. எருசலேமின் Muristan மாவட்டத்திலுள்ள Amalfitan மருத்துவமனையோடு தொடர்புகொண்டிருந்த Hospitallers என்ற ஒரு குழுவே இதனை உருவாக்கியது. முத்திப்பேறுபெற்ற Gerard Thom என்பவரால் 1023ம் ஆண்டு இம்மருத்துவமனை உருவாக்கப்பட்டது. புனித திருமுழுக்கு யோவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இம்மருத்துவமனை, புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் ஏழைகள், நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களைப் பராமரிப்பதற்காக அமைக்கப்பட்டது. முதல் சிலுவைப்போரின்போது 1099ம் ஆண்டில் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் எருசலேமைக் கைப்பற்றிய பிறகு, இந்த Hospitallers அமைப்பு தனக்கென ஒரு சட்ட அமைப்பைக்கொண்டு, சமய மற்றும் இராணுவ அமைப்பாக மாறியது. 1113ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியன்று திருத்தந்தை 2ம் பாஸ்கால், "Piae postulatio voluntatis" என்ற அறிக்கையின் மூலம் இந்த மால்ட்டா அமைப்பின் ஆன்மீக மற்றும் இறையாண்மையின் தனித்துவத்தை ஏற்று அதற்குத் திருப்பீடத்தின் அங்கீகாரம் அளித்தார்.
மேலும், புனித பூமியை இசுலாமியப் படைகள் கைப்பற்றிய பின்னர், இந்த Hospitallers அமைப்பு, 1522ம் ஆண்டுவரை Rhodesலிருந்தும், பின்னர் மால்ட்டாவிலிருந்தும் செயல்பட்டது. எனவே 1522ம் ஆண்டுவரை Knights of Rhodes என அழைக்கப்பட்ட இந்த அமைப்பு, 1530ம் ஆண்டிலிருந்து Knights of Malta என்று அழைக்கப்பட்டு வருகிறது. 1798ம் ஆண்டில் ப்ரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் மால்ட்டாவை கைப்பற்றிய பின்னர் இந்த அமைப்பு நலிவடைந்து ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. மீண்டும் 19ம் நூற்றாண்டில் இவ்வமைப்பு தனது மனிதாபிமான மற்றும் மதம் சார்ந்த நடவடிக்கைகளைத் தொடங்கியது. 1834ம் ஆண்டில் இறையாண்மை கொண்ட ஓர் அமைப்பாக(SMOM), உரோம் நகரில் தனது தலைமையகத்தைக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இந்த கத்தோலிக்க அமைப்பிலிருந்து நான்கு கிளைஅமைப்புகள், பிரிந்த கிறிஸ்தவர்களைக் கொண்டு உருவாகின. இவை, ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், சுவீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இயங்குகின்றன.
இந்த 2013ம் ஆண்டில் 900மாம் ஆண்டைக் கொண்டாடும் The Knights of Malta என்ற கத்தோலிக்க அமைப்பு, 13,500 உறுப்பினர்கள், 80,000 தன்னார்வப் பணியாளர்கள், 25,000க்கு மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர் மற்றும் நலப்பணியாளர்களின் ஆதரவுடன் 120 நாடுகளில் மருத்துவ, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றது. இந்த அமைப்பு பெத்லகேமில் நடத்தும் மருத்துவமனையில் 1990ம் ஆண்டிலிருந்து 57,000க்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. சிரியா, துருக்கி, லெபனன் ஆகிய நாடுகளில் 10,000க்கு மேற்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகிறது. உலகின் ஏழ்மை, பசி, நோய் போன்றவற்றைப் போக்குவதற்காக தொடர்ந்து உழைத்து வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.