2013-02-13 16:03:23

ராஞ்சியில் Constant Lievens மருத்துவமனைக்கு கர்தினால் Filoni அடிக்கல் நாட்டினார்


பிப்.13,2013. இந்தியாவில், நலப் பணிகளில் பின்தங்கியுள்ள ஒரு பகுதியில் மருத்துவ மனையையும் மருத்துவ கல்லூரியையும் ஆரம்பிக்க இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியதேன்று கர்தினால் Fernando Filoni கூறினார்.
நற்செய்தி அறிவிப்புப் பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் Filoni, இந்தியாவில் மேற்கொண்டுள்ள தன் மேய்ப்புப்பணி பயணத்தின் ஓர் அங்கமாக, இப்புதன் காலையில் ராஞ்சியில் Constant Lievens மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்த ஒரு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும்போது இவ்வாறு கூறினார்.
மனித துன்பத்தை, முக்கியமாக, உடல் நலக் குறைவால் எழும் துன்பத்தைத் துடைக்க கத்தோலிக்கத் திருஅவை உலகெங்கும் உழைத்து வருவது அனைவரும் அறிந்த ஓர் உண்மை என்று கூறிய கர்தினால் Filoni, இந்தியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் தனிப்பட்ட ஓர் அடையாளமாக நலப்பணிகள் அமைந்துள்ளன என்பதை பெருமையுடன் எடுத்துரைத்தார்.
1885ம் ஆண்டு சோட்டா நாக்பூர் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் மத்தியில் உழைக்க வந்த இறையடியாரான இயேசு சபை அருள்தந்தை Constant Lievens அவர்களின் பணியையும் வாழ்வையும் புகழ்ந்து பேசிய கர்தினால் Filoni, அவரது நினைவை மக்கள் மனதில் அழியாமல் பதிக்க இந்த நலப்பணி நிறுவனம் பெரிதும் உதவும் என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.