2013-02-13 15:53:59

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


பிப்.13, 2013. திருத்தந்தையின் பதவி விலகலுக்கான விருப்பம் குறித்து இந்நாட்களில் உலகம் முழுவதும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுவரும் வேளையில், இப்புதனன்று வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் பொதுமறைபோதகத்தை வழங்கவந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், முதலில், தன் பதவி விலகல் குறித்து மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்து விளக்கத்தையும் அளித்தார்.
அன்பு சகோதர சகோதரிகளே! உங்களின் பரிவுணர்வுகளுக்கு நன்றி. நீங்கள் ஏற்கனவே அறிந்துள்ளதுபோல், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி இறைவன் என்னிடம் ஒப்படைத்த பணியிலிருந்து ஓய்வுபெற நான் முடிவு செய்துள்ளேன். பாப்பிறைப்பணி எதிர்நோக்கும் ஆற்றலை தற்போது என்னால் கொடுக்க முடியாத நிலையை உணர்ந்தவனாய், நீண்ட காலச் செபத்திற்கு பின்னரும், இறைவனின் முன்னிலையில் என் மனச்சான்றை ஆய்வு செய்த பின்னரும், திருஅவையின் நலனுக்காக முழு சுதந்திரத்துடன் இம்முடிவை எடுத்துள்ளேன். கிறிஸ்துவினுடையது திருஅவை. அதற்கு வழிகாட்டுதலையும் அன்பையும் இறைவன் தொடர்ந்து வழங்கி வருகிறார் என்ற உறுதியான எண்ணம், என்னை ஒளிர்வித்து பலமூட்டுகிறது. எனக்குத் துணை வந்த உங்களின் அன்பு மற்றும் செபத்திற்கு நன்றிகூறுகிறேன். இந்நாட்களில் உடலளவில் பலவீனமாக உணர்ந்த நான், செபத்தின் பலம், திருஅவையின் அன்பு, உங்களின் செபம் ஆகியவற்றால் முன்னோக்கி நடைபோடுகிறேன். எனக்காகவும், திருஅவைக்காகவும், அடுத்த திருத்தந்தைக்காகவும் தொடர்ந்து செபியுங்கள். இறைவன் வழிநடத்துவார், என உரைத்த திருத்தந்தை, அதன்பின் தன் வழக்கமான மறைபோதகத்தில் –தவக்காலம்- குறித்து எடுத்துரைத்தார்.
இன்று திருநீற்றுப்புதன். உயிர்ப்பு விழாவுக்கு தயாரிக்கும் வகையில் மனமாற்றத்தின் தவக்கால ஆண்டுப் பயணத்தை இன்று துவக்குகிறோம். தவக்காலத்தின் நாற்பது நாட்கள் என்பது இஸ்ரயேலர்களின் பாலைவனப் பயணத்தையும், இயேசுவின் வெளியுலக வாழ்வுக்கு முன்னான சோதனைகளையும் நம் நினைவுக்குக் கொணர்கிறது. இறைவனை அமைதியில் சந்திக்கும் இடமாகவும், நம் வாழ்வின் பாதை மற்றும் ஆழமான அர்த்தம் குறித்து, தீர்மானிக்கும் பாலைவனம், சோதனைகளின் இடமும் கூட. குறிப்பாக, இன்றைய சமயசார்பற்ற சமூகத்தில் நம் வாழ்வையும் சிந்தனைகளையும் இறைவிருப்பமே வழிநடத்தவேண்டும் என்பதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை இயேசுவின் பாலவன சோதனை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. தீவிர மனமாற்றத்தின் எடுத்துக்காட்டுகளின் தொடர் வரிசையில் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் Pavel Florensky, ஹாலந்தின் இளம்பெண் Etty Hillesum, அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெண் Dorothy Day ஆகியோரை சுட்டிக்காட்டி வரும் அதேவேளை, விசுவாசத்தில் வளர்க்கப்பட்டவர்களின் ஆழமான மனமாற்றத்திற்கும் அழைப்பு விடுத்துக்கொண்டேயிருக்கிறார். இந்தத் தவக்காலத்தில் மீண்டும் ஒருமுறை நம் கதவுகளைத் தட்டி, அவரின் அன்பு மற்றும் உண்மைக்கு நம் இதயங்களையும் மனங்களையும் திறக்கும்படி அழைக்கிறார். சோதனையை வென்றதில் இயேசு காட்டிய எடுத்துக்காட்டு, நாம் இறைவிருப்பத்தை அரவணைக்கவும், அவரின் மீட்பளிக்கும் உண்மையின் ஒளியில் அனைத்தையும் நோக்கவும் நம்மைத் தூண்டுவதாக.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.