2013-02-13 16:02:53

தவக்காலத்தில் மேற்கொள்ளப்படும் 'Fraternity Campaign' முயற்சிக்குத் திருத்தந்தையின் வாழ்த்துக்கள்


பிப்.13,2013. நற்செய்தியின் அடிப்படையில் மனித நேயத்துடன் வளரும் சமுதாயத்தைக் கட்டியெழுப்ப இளையோரைத் தூண்டும் தவக்கால முயற்சிக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் வாழ்த்துக்களையும் ஆசீரையும் அனுப்பியுள்ளார்.
பிரேசில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையால் ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் 'Fraternity Campaign' என்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 1964ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியின் 50ம் ஆண்டுக்கென 'இளையோரும் சமுதாயமும்' என்ற தலைப்பில் இவ்வாண்டு கொண்டாடப்படும் இம்முயற்சிகளுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாண்டு பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் இளையோர் உலக நாள் கொண்டாட்டங்களுடன் இத்தவக்கால முயற்சிகளும் இணைந்து, பிரேசில் இளையோரை நற்செய்தியின் தூதர்களாக மாற்றும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை.
காக்கும் கடவுள் இளையோரின் வாழ்வை முற்றிலும் ஆட்கொள்ளவும், இவ்விதம் உலகில் உள்ள ஏனைய இளையோருக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் கருவிகளாக அவர்களை மாற்றவும் அன்னை மரியா துணைபுரிய வேண்டும் என்று திருத்தந்தை தன் செய்தியில் வாழ்த்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.