2013-02-13 16:03:01

இம்மாதம் 27ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் இறுதி புதன் பொது மறைபோதகத்தை வழங்குவார்- திருப்பீடப் பேச்சாளர்


பிப்.13,2013. தான் பதவி விலகுவதாக திருத்தந்தை அறிவித்தது பல நாட்கள் ஆழ்ந்து சிந்தித்து எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும், இம்முடிவை அறிவித்தபின் திருத்தந்தை மிகுந்த அமைதியோடு காணப்படுகிறார் என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பதவி விலகுவதாக அறிவித்தபின், மீண்டும் ஒருமுறை இச்செவ்வாயன்று செய்தியாளர்களைச் சந்தித்த அருள்தந்தை Lombardi, பிப்ரவரி மாதம் இறுதிவரை திருத்தந்தை கலந்துகொள்வதாய் அறிவிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என்பதைத் தெளிவுபடுத்தினார்.
திருத்தந்தையின் இந்த அறிவிப்புக்குப் பின், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பர் என்ற காரணத்தால், வழக்கமாக புனித Sabina கோவிலில் நடைபெறும் திருநீற்றுப் புதன் திருப்பலி, இப்புதன் மாலை புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று அறிவித்தார் அருள்தந்தை Lombardi.
இம்மாதம் 27ம் தேதி புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் இறுதி புதன் பொது மறைபோதகத்தை வழங்குவதால், அன்றைய மறைபோதகத்திற்கு ஏராளமான மக்கள் வருவதை எதிர்பார்த்து, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் இந்த இறுதி புதன் மறைபோதகம் நடைபெறும் என்றும் அருள்தந்தை Lombardi கூறினார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறவிருக்கும் அகில உலக இளையோர் நாள் நிகழ்ச்சிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதையும், இந்நிகழ்ச்சிகளில் புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் திருத்தந்தை கலந்துகொள்வார் என்பதையும் அருள்தந்தை Lombardi தெளிவுபடுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.