2013-02-12 15:28:51

விவிலியத்
தேடல் - 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 1


RealAudioMP3 இயேசுவின் உவமைகள் என்ற கடலுக்குள் காலடி எடுத்துவைக்கிறோம். கடற்கரையில் நின்றபடி, அலைகள் வந்து நம் கால்களை நனைத்துச்செல்லக் காத்திருப்பது கடலை அனுபவிக்கும் ஒரு வழி. அல்லது, கடலுக்குள் இறங்கி முற்றிலும் நனைவது மற்றொருவழி. நம்முன் நீண்டு பரந்து கிடக்கும் கடலில் பயணம் மேற்கொள்வது இன்னுமொரு வழி. ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பது மற்றுமொரு வழி. இவை அனைத்துமே கடலின் பல்வேறு அனுபவங்களை நமக்கு வழங்கும்.
கடலில் பயணம் மேற்கொள்வதும், கடலுக்குள் மூழ்கச் செல்வதும் ஆர்வத்தைத் தூண்டலாம்; அச்சத்தையும் உருவாக்கலாம். அதேபோல், இயேசுவின் உவமைகள் என்ற கடல் நமக்குள் ஆர்வத்தைத் தூண்டும் அதே நேரம், ஒருவகை மலைப்பையும் உருவாக்குவதை உணரலாம். இப்பயணத்தைத் தவக்காலத்தின் துவக்கத்தில் ஆரம்பித்திருப்பது ஓர் அருள்நிறைந்த வாய்ப்பு என்றே கருதுகிறேன். தவக்காலம் நம் அனைவருக்கும் விடுக்கும் ஒரு முக்கியமான அழைப்பு - மாற்றம் பெறுதல். நமக்குள் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆவலுடன், வேண்டுதலுடன் இயேசுவின் உவமைகள் என்ற கடலில் நமது பயணத்தைத் துவக்குவோம்.

கடற்பயணம் என்ற எண்ணமே ஓர் உவமையாக என் மனதில் விரிகிறது. இந்த உவமையை, முடிந்த அளவு சுருக்கமாகக் கூற முயல்கிறேன். கடற்பயணம் துவங்குவதற்கு, படகோ, கப்பலோ முதலில் கரையைவிட்டுப் புறப்படவேண்டும். பாதுகாப்பு கருதி, படகைக் கரையில் ஏற்றி, கயிற்றில் பிணைப்பது வழக்கம். அதேபோல், கப்பலைக் கடலின் தரையோடு பிணைப்பது நங்கூரம். கயிற்றையோ, நங்கூரத்தையோ எடுத்தால்தான் பயணம் ஆரம்பமாகும். கரையோடு, தரையோடு தங்கிவிடும் படகோ, கப்பலோ பாதுகாப்பாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், கரையில் நிற்பதற்கா கப்பல்கள் கட்டப்படுகின்றன?
கடந்த ஞாயிறு நற்செய்தியில் சொல்லப்பட்ட நிகழ்வில், கரையில் நின்ற படகில் இருந்து இயேசு போதித்தபின், பேதுருவிடம் கூறிய வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன. இயேசு பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்என்றார். (லூக்கா 5:4) இயேசுவின் இந்த அழைப்பு பேதுருவுக்கும், சீடர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். பகலில் மீன்பிடிப்பது அவர்கள் வாழ்வில் அதுவரை செய்ததில்லை. அவர்கள் பாதுகாப்பாய் உணர்ந்து பின்பற்றிய பழக்கங்களை மாற்றி, வேறொரு ஆழத்திற்கு அவர்களை வரச்சொல்லி அழைத்தார் இயேசு. பாதுகாப்பை விட்டு ஆழத்திற்கு வாருங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்கு அளித்த அதே அழைப்பு நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுவின் இவ்வழைப்பை ஏற்று, ஆழத்திற்கு நாம் செல்லும்போது, நாம் இதுவரை பாதுகாப்பு கண்ட கரைகளைத் தவிர, புதிய கரைகள், புதிய நாடுகள் நோக்கி நமது பயணம் செல்லும்.

அடுத்தபடியாக, கடல் பயணங்கள் மேற்பரப்பிலேயே நடக்க வேண்டும் என்ற நியதி இல்லை. கடலுக்குள் ஆழ்ந்து செல்வதும் ஒரு வகை ஆய்வுப் பயணம். 'ஆழத்திற்கு வாருங்கள்' என்று ஆண்டவன் விடுக்கும் அழைப்பு இந்த ஆய்வுப் பயணத்திற்கு நம்மை அழைக்கிறது. ஆழத்திற்குச் செல்லும்போதுதான், கடலின் முக்கியக் கொடையான முத்துக்களை நாம் பெறமுடியும்.
Henry Wadsworth Longfellow என்ற ஆங்கிலக் கவிஞர் 1850ம் ஆண்டு எழுதிய 'The Secret of the Sea' என்ற கவிதையின் ஒரு சில வரிகள்:
'கடலின் இரகசியங்களைக் கற்பதற்கு
உனக்கு விருப்பமா?' எனக் கேட்ட மாலுமி,
'கடலின் ஆபத்துக்களை எதிர்கொள்வோரே
அதன் இரகசியங்களையும் புரிந்துகொள்வர்' எனக் கூறினார்.“Wouldst thou,”—so the helmsman answered,
“Learn the secret of the sea?
Only those who brave its dangersComprehend its mystery!”

இயேசுவின் உவமைகள் என்ற கடலில் நம் பயணத்தைத் துவக்குவோம். நான்கு நற்செய்திகளிலும் உவமைகள் கூறப்பட்டுள்ளன. Synoptic Gospels - அதாவது, 'ஒத்தமைக் கண்ணோட்டம் கொண்ட நற்செய்திகள்' என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளில் இயேசு கூறிய பெரும்பாலான உவமைகள் பதிவாகியுள்ளன. யோவான் நற்செய்தியில் வெகு சில பகுதிகள் உவமைகளாகக் கருதப்படுகின்றன.
இயேசு எத்தனை உவமைகளைக் கூறினார்? இவற்றில் எத்தனை உவமைகள் ஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்திகளில் இடம்பெற்றுள்ளன? இவ்வுவமைகளை இயேசு எங்கு எப்போது சொன்னார்? இவ்வுவமைகளில் சொல்லப்பட்டுள்ள விவரங்களுக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளனவா? என்ற ஆழமான ஆய்வுகள் கடந்த பல நூற்றாண்டுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளை மேற்கொண்ட விவிலிய அறிஞர்கள் தாங்கள் கண்டுணர்ந்தவற்றை பாடங்களாக நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் மேற்கொண்ட பயணத்தைப் பின்பற்றி, நமது விவிலியத் தேடல் தொடரை ஓர் ஆய்வுத் தொடராக நடத்திச்செல்ல எனக்குத் தகுதியில்லை, மனமும் இல்லை. எனவே, உவமைகளின் ஆய்வு என்ற கண்ணோட்டத்தை விடுத்து, உவமைகளின் பொருளைத் தேட முயல்வோம். எடுத்துக்காட்டாக, இயேசு எத்தனை உவமைகள் கூறினார் என்ற விவாதத்தில் நமது கவனத்தைச் செலுத்தாமல், அவர் எவ்வகையான உவமைகள் கூறினார் என்பதிலும், அவ்வுவமைகள் வழியே நாம் கற்றுணரக் கூடிய பாடங்களிலும் நம் கவனத்தைச் செலுத்துவோம்.
கதைகள் வடிவிலும், வெறும் ஒப்புமை வடிவிலும் இயேசுவின் உவமைகள் நற்செய்திகளில் பதிவாகியுள்ளன. நமது தேடல் தொடரின் துவக்கத்தில் கதை வடிவில் அமைந்துள்ள உவமைகளில் நம் கவனத்தைத் திருப்புவோம். கதையாகச் சொல்லப்பட்டுள்ள பல அற்புதமான உவமைகள் லூக்கா நற்செய்தியில் இடம்பெற்றுள்ளன. எனவே, நம் தேடலை லூக்கா நற்செய்தியில் துவக்குவோம்.
லூக்கா நற்செய்தியில் கதை வடிவில் இடம்பெற்றுள்ள இவ்வுவமைகள் கிறிஸ்தவம் என்ற வட்டத்தைத் தாண்டி, ஏனைய மதத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. நல்ல சமாரியர், காணாமற்போன மகன் அல்லது ஊதாரிப்பிள்ளை, செல்வந்தரும் ஏழை இலாசரும், அறிவற்றச் செல்வன் போன்ற கதைகள் பல கோடி மக்களின் மனங்களில் பதிந்து, பாதிப்புக்களை உருவாக்கியுள்ள கதைகள். இவற்றில் முதன்மையாக, நமது தேடலை 'நல்ல சமாரியர்' என்ற உலகப் புகழ்பெற்ற உவமையில் ஆரம்பிப்போம்.

Good Samaritan என்ற வார்த்தைகளை Google தேடலில் நான் பதிவுசெய்ததும், நொடிப் பொழுதில் 1,40,00000 விவரங்கள் தோன்றின. இவற்றில் பல இலட்சம் விவரங்கள் 'நல்ல சமாரியர்' என்ற பெயர் தாங்கிய மருத்துவமனைகளும், பிறரன்பு நிறுவனங்களும். இத்தேடலில் என் கவனத்தை ஈர்த்த ஒரு தகவல்... 'நல்ல சமாரியர்' என்ற பெயரில் பல நாடுகளில் கடைபிடிக்கப்படும் சட்டங்கள். ஆம், அமேரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளில் 'நல்ல சமாரியர்' என்ற பெயரில் சட்டங்கள் உள்ளன. இந்நாடுகளில் பொது இடங்களில் யாரேனும் அடிபட்டால், அவர்களுக்கு உடனடி உதவிகள் செய்வதற்கு சூழ நிற்பவர்கள் தயங்குவர். காரணம்... அவர்கள் உதவி செய்யப்போய், அதனால் அடிபட்டவருக்கு இன்னும் அதிக ஆபத்தாகிவிட்டால், உதவி செய்யப்போனவர் மீது வழக்கு தொடரப்படும் என்ற பயம். இருப்பினும், இச்சூழலில் என்ன செய்யலாம், செய்யக்கூடாது என்பனவற்றை விளக்கும் விதிகள் 'நல்ல சமாரியர்' சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளன.
இவ்வகைச் சட்டங்கள் இருந்தாலும், அவற்றையும் தாண்டி அந்நாடுகளில் தேவையில் இருப்போருக்கு உதவிகள் செய்ய முன்வரும் 'நல்ல சமாரியர்களும்' இருப்பதைக் காணமுடிகிறது. சட்டத்தைப் பெரிதாக நினையாமல், இயேசு சொன்ன இந்த உவமையால் இந்த உள்ளங்கள் தூண்டப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.

சென்ற வாரம் அமெரிக்காவின் நியூயார்க், நகருக்கருகே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு இது: பிப்ரவரி, 5, கடந்த செவ்வாயன்று Pedro Lugo என்ற 69 வயது மனிதர், கார் பழுதடைந்ததால் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தவித்துக்கொண்டிருந்த ஒரு மாற்றுத் திறனாளியான பெண்ணுக்கு உதவி செய்தார். அப்பெண்ணின் காரை சரி செய்தபின், Pedro தன் காரில் ஏறி மீண்டும் நெடுஞ்சாலைக்குள் நுழைந்தபோது, வேகமாக வந்த ஒரு லாரி அவர் கார் மீது மோதியது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் Pedro உயிர் துறந்தார் என்பது செய்தி.
Good Samaritan என்ற சொற்றொடர் ஊடகங்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர். உதவி செய்த Pedro Lugoவைப் பற்றி செய்தித்தாள்களும், தொலைக்காட்சி நிகழ்வுகளும் குறிப்பிடுகையில், அவரை 'நல்ல சமாரியர்' என்றே குறிப்பிட்டனர். இதேபோல், கனடாவின் Vancouver நகரில் குற்றம் புரிந்த ஒருவரைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க உதவியவரை 'நல்ல சமாரியர்' என்ற அடைமொழியால் குறிப்பிட்டனர். இதோ அவ்விரு செய்திகளுக்கு நாளிதழ்கள் தந்த தலைப்புக்கள்:
Good Samaritan dies after helping disabled N.Y. motorist.
Good Samaritan helped nab suspect in Vancouver sex assault case.
இருபது நூற்றாண்டுகள் சென்றும் இயேசுவின் இந்த உவமை இன்னும் மக்கள் மத்தியில், அதுவும் கிறிஸ்தவம் என்ற வட்டத்தைத் தாண்டி மக்கள் மனங்களில் தூண்டுதலாய் உள்ளது என்பது இந்த உவமையின் சக்தியைப் பறைசாற்றுகிறது.

இந்த உலகப் புகழ்பெற்ற 'நல்ல சமாரியர்' உவமை பிறந்த பின்னணி லூக்கா நற்செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
லூக்கா நற்செய்தி 10: 25
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். என்று இவ்வுவமையின் பின்னணி ஆரம்பமாகிறது.
இயேசுவிடம் எவ்வகையிலாவது குறைகாண வேண்டும் என்ற ஆவலில் திருச்சட்ட அறிஞர் கேள்வியைத் தொடுத்தாலும், இயேசு அந்த வாய்ப்பை நழுவவிடாமல், அற்புதமானதொரு உலகப் புகழ்பெற்ற உவமையைக் கூறினார். இந்த உவமையின் ஆழம் நம்மை மலைக்கவைக்கிறது. வாருங்கள் இந்த ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்போம்.








All the contents on this site are copyrighted ©.