2013-02-12 16:26:35

புனித ஆல்பர்ட் கல்லூரி திருஅவையின் தேவைகளுக்குத் தொடர்ந்து பணியாற்ற கர்தினால் ஃபிலோனி வாழ்த்து


பிப்.12,2013. திருஅவையின் மிக முக்கிய திருப்பணிகளில் ஒன்றாக, துறவற மற்றும் பொதுநிலையினர் பயிற்சிகளோடு, வருங்கால குருக்களை உருவாக்கும் குருத்துவப் பயிற்சியும் இருக்கின்றது என்று கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி கூறினார்.
இம்மாதம் 9ம் தேதி முதல் இந்தியாவில் ஒரு வாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி, இராஞ்சி புனித ஆல்பர்ட் குருத்துவக் கல்லூரியின் நூறாவது ஆண்டு விழாவில் இச்செவ்வாயன்று உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்.
புனித ஆல்பர்ட் குருத்துவ கல்லூரியின் குருத்துவ மாணவர்களுக்கு உரையாற்றிய கர்தினால் ஃபிலோனி, பல கலாச்சாரங்கள் அழியும் ஆபத்தை எதிர்நோக்கி வரும் இக்காலத்தில் குருக்கள் தங்களது சொந்தக் கலாச்சாரத்திலும் நற்செய்தி விழுமியங்களிலும் வேரூன்றி இருப்பது மிகவும் முக்கியம் எனவும் கூறினார்.
Chota Nagpur பகுதிக்கும், வட இந்தியா முழுவதற்குமான இராஞ்சி புனித ஆல்பர்ட் குருத்துவக் கல்லூரி இதுவரை 2,000த்துக்கு மேற்பட்ட புதிய குருக்களை உருவாக்கியிருக்கின்றது. இவர்களில் 35 பேர், ஆயர்களாகவும் பேராயர்களாகவும் உயர்ந்துள்ளனர். ஒருவர் கர்தினாலாகவும் ஆகியிருக்கிறார் என்ற தகவல் கேட்டுத் தான் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார் கர்தினால் ஃபிலோனி.







All the contents on this site are copyrighted ©.