2013-02-12 16:28:58

தண்ணீரை நிர்வகிப்பதில் நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பு அவசியம், ஐ.நா.


பிப்.12,2013. உலகின் அமைதிக்கும் வளர்ச்சிக்குமான நடவடிக்கைகளில் விலைமதிப்பற்ற ஆதாரமாக இருக்கும் தண்ணீரை நிர்வகிப்பதில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு தருவதற்கு அழைப்பு விடுத்து அனைத்துலக தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டை இத்திங்களன்று தொடங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.
2013ம் ஆண்டு, அனைத்துலக தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு ஒலி-ஒளிச் செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இந்தப் பூமி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்கு மையமாக விளங்கும் தண்ணீரைப் பாதுகாத்து கவனமுடன் நிர்வகிக்குமாறு கேட்டுள்ளார்.
உலகில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் தங்களது அன்றாட வாழ்வுக்கு நீர்ஆதாரங்களை நம்பியிருக்கின்றனர் என்றும், ஆறுகள் அல்லது ஏரிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உலகின் 90 விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர் என்றும் பான் கி மூனின் செய்தி கூறுகின்றது.
எனினும், உலகின் 276 பன்னாட்டு ஆற்றுப்படுகைகளின் 60 விழுக்காட்டுப் பகுதி, எந்தவிதமான நிர்வாக ஒத்துழைப்பு இன்றி இருப்பதாகவும் ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி கூறுகின்றது.
வருகிற மார்ச் 22ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக தண்ணீர்த் தினத்துக்கும், தண்ணீர் விவகாரங்கள் குறித்த ஒத்துழைப்பே மையப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.