2013-02-11 17:07:09

சென்னையில் இந்திய தேசிய பொதுநிலையினர் கருத்தரங்கு


பிப்.11,2013. இந்திய தேசியப் பொதுநிலையினர் கருத்தரங்கு ஒன்றை சென்னை சாந்தோம் பேராலய பசிலிக்காவில் இத்திங்கள் மாலை தொடங்கி வைத்தார் கர்தினால் பெர்னாண்டோ ஃபிலோனி.
இந்தியாவுக்கான ஒரு வாரச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி தொடங்கி வைத்துள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கை, CBCI என்ற இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கின் நோக்கம் குறித்து வத்திக்கான் வானொலிக்குச் செய்தி அனுப்பியுள்ள இப்பணிக்குழு செயலர் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை, பொதுநிலையினர் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்தை மீண்டும் கண்டுணர்ந்து அதில் ஆழப்படவும், பல சமயத்தினர் வாழும் ஒரு நாட்டில் கிறிஸ்தவர்கள் உலகின் ஒளியாகவும் உப்பாகவும் வாழ்வதற்குத் தங்களை அர்ப்பணிக்கவும் உதவும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது என்று கூறினார்.
இக்கருத்தரங்கின் தொடக்க நிகழ்வில், இந்தியத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ, சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, CBCI பேரவையின் பொதுநிலையினர் பணிக்குழுத் தலைவரான கொல்லம் ஆயர் Stanley Roman உட்பட பல ஆயர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நம்பிக்கை ஆண்டில் இத்தகைய கருத்தரங்குகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெறும் எனவும் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை கூறினார்.
அருள்பணியாளர்கள் ஜோமிக்ஸ், ஆனந்தம், டாக்டர் புஷ்பராஜன் ஆகியோர் இக்கருத்தரங்கை வழிநடத்துகிறார்கள் என்றும் அருள்பணி வின்சென்ட் சின்னத்துரை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.