2013-02-11 17:03:42

கற்றனைத்தூறும்..... பசிலிக்கா


பசிலிக்கா என்றால் கிரேக்கத்தில் அரசரின் நீதிமன்றம் என்று அர்த்தம். பசிலிக்கா என்ற இலத்தீன் சொல் கிரேக்க மூலத்தைக் கொண்டது. பண்டைய உரோமைய அங்காடியிலிருந்த பொதுக்கட்டிடம், பசிலிக்கா என அழைக்கப்பட்டது. பழங்கால உரோமன் பசிலிக்கா, பண்டமாற்று வணிகத்துக்கும், சட்டம் சார்ந்த பிரச்சனைகள் தீர்க்கப்படவும் பயன்படுத்தப்பட்டது. அகுஸ்துஸ் பேரரசர் காலத்தில், வணிகம் சார்ந்த விடயங்கள் நடத்தப்படும் இடமாக பசிலிக்கா பயன்படுத்தப்பட்டது. இது ஒரு நகரமாகவே கருதப்பட்டது. மத்திய காலத்தில் வட ஐரோப்பாவில், நகரங்களில் மக்கள் ஒன்றுகூடுவதற்கு வசதியாக பொதுவான இடங்களில் பசிலிக்காக்களை அமைத்தனர். இவ்வாறு அமைக்கப்பட்ட பசிலிக்காக்கள், சந்தைகளாகப் பயன்படுத்தப்பட்டன. எனினும் இந்தப் பசிலிக்காக்களின் வடிவமைப்புகள் இடத்துக்கு இடம் வேறுபட்டிருந்தன. பசிலிக்காக்கள் பொதுவாக, வில்வடிவில் மேற்கூரையையும், நடுகூடத்தில் சமஇடைவெளிகளில் தூண்களையும் கொண்டிருந்தன. நடுக்கூடம் தொடங்கும் ஒருபகுதியில் நீதிபதிகள் அமர்வதற்கு ஏற்றாற்போல் சற்று உயரமான மேடை அமைக்கப்பட்டது. கி.மு.184ல் உரோமையில் கட்டப்பட்ட பசிலிக்கா Porcia, மிகப்பழமையான உரோமன் பசிலிக்காவாகும். உரோமையில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய பின்னர், இதே பசிலிக்கா வடிவில் அமைக்கப்பட்ட கிறிஸ்தவக் கட்டிடமும் பசிலிக்கா என அழைக்கப்படலாயிற்று. செவ்வக வடிவில் பசிலிக்காக்கள் இருந்தாலும், மத்தியில் நடுக்கூடத்தையும், இரு பக்கங்களிலும் பிரகாரங்களைக் கொண்ட கட்டிட அமைப்பே கிறிஸ்தவத்தில் பின்பற்றப்பட்டது. காலப்போக்கில், திருத்தந்தையால் அங்கீகரிக்கப்பட்ட, பெரிய மற்றும் முக்கியமான ஆலயம், பசிலிக்கா என அழைக்கப்பட்டது. இந்தப் பசிலிக்காக்கள், கத்தோலிக்கரின் திருப்பயண இடங்களாக இருக்கின்றன. இவ்விடங்களை ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கானத் திருப்பயணிகள் தரிசிக்கின்றனர். 4ம் நூற்றாண்டில் உரோமையில் கட்டப்பட்ட புனித பேதுரு பசிலிக்கா, 15ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் விரிவுபடுத்தப்பட்டு, 19ம் நூற்றாண்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது கத்தோலிக்கத் திருஅவையில் வத்திக்கான் புனித பேதுரு, உரோம் புனித ஜான் இலாத்தரன், புனித பவுல், புனித மேரி ஆகிய நான்கு பெரிய (மேஜர்) பசிலிக்காக்கள் உள்ளன. இவற்றில், ஜூபிலி ஆண்டில் மட்டும் திறக்கப்படும் புனிதக் கதவுகள் உள்ளன. அதோடு, கிறிஸ்தவத்தின் மையத்தில் ஒன்றிணைவதன் அடையாளமாக, உலகின் பெரிய திருஆட்சிப்பீடங்களின் பிரதிநிதிகளைக் குறிக்கும் விதமாக, இந்த நான்கும், முதுபெரும் தலைவர் பசிலிக்காக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
உரோம் புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா மேற்கின் முதுபெரும் தலைவராகிய திருத்தந்தைக்கும், வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தலைவருக்கும், புனித பவுல் பசிலிக்கா அலெக்ஸாண்டியா முதுபெரும் தலைவருக்கும், புனித மேரி பசிலிக்கா அந்தியோக் முதுபெரும் தலைவருக்கும் குறிக்கப்பட்டுள்ளன. உரோம் புனித இலாரன்ஸ் பசிலிக்கா, எருசலேம் முதுபெரும் தலைவருக்கென குறிக்கப்பட்டுள்ளதால் இதுவும் பெரிய பசிலிக்கா எனக் கருதப்படுகிறது. இந்தப் பெரிய (மேஜர்) பசிலிக்காக்கள் பாப்பிறையின் அரியணையையும், திருப்பிலி பீடத்தையும் கொண்டுள்ளன.
மேலும், உலகில் 1,400க்கு மேற்பட்ட சிறிய(மைனர்) பசிலிக்காக்கள் உள்ளன. இத்தாலியில் மட்டும் 527 சிறிய(மைனர்) பசிலிக்காக்கள் உள்ளன. வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னைத் திருத்தலம், தூத்துக்குடி பனிமய அன்னை திருத்தலம் போன்றவை சிறிய(மைனர்) பசிலிக்காக்கள் ஆகும்.







All the contents on this site are copyrighted ©.