2013-02-09 15:55:43

பூமியைத் தாக்கவரும், சூப்பர் புயல்: பிரிட்டன் அறிவியலாளர்கள் எச்சரிக்கை


பிப்.09,2013. சூரியனிலிருந்து 100 அல்லது 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பயங்கரப் புயல் ஒன்று, அண்மை வருங்காலத்தில் பூமியைத் தாக்கலாம் என ஓர் அறிவியல் ஆய்வறிக்கைத் தெரிவிக்கின்றது.
இதனால், செயற்கைக்கோள்கள், விமானம் மற்றும் மின்சாரச் சேவைகள் பாதிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் எச்சரித்துள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், சூரியனால் உமிழப்படும் துகள்கள், ஒன்று சேர்ந்து இந்தப் புயல் உருவாகிறது என்று தெரிவித்துள்ளனர்.
கோடிக்கணக்கான டன் கணக்கில் உமிழப்படும் இத்துகள்கள், மணிக்கு, 16 இலட்சம் கி.மீ. வேகத்துடன் பூமியை நோக்கி வரும் என்றும், இந்தப் புயல் தோன்றுவதற்கு, 30 நிமிடங்களுக்குமுன்தான், அது உருவானதுபற்றி அறியமுடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தப் பெரிய "சூரியப் புயல்", கடந்த 1859ம் ஆண்டில் பூமியைத் தாக்கியுள்ளது. இதேபோன்ற "சூரியப் புயல்"கள், 1956, 1972, 1989, 2003 ஆகிய ஆண்டுகளில் வெளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்கப் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையை, இலண்டனிலுள்ள, "Royal Academy of Engineering" என்ற நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, இந்த அமைப்பின் செயல்திட்ட தலைவர் பேராசிரியர் Paul Cannon, இந்தப் புயல் சவாலானது என்றாலும், பிரளயம் ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானதல்ல. இதைக் கண்காணிக்க வானிலை மையம் ஒன்றை அமைத்து, பெரும் சேதம் நிகழாமல் தடுக்கமுடியும் என்று கூறியுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.