2013-02-09 15:41:51

திருத்தந்தையும் Malta பிறரன்பு அமைப்பினரும்


பிப்.09,2013. உலகை மீட்ட இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் கொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சி மற்றும் அர்ப்பணத்தைப் புதுப்பிப்பதற்கு இந்த நம்பிக்கை ஆண்டில் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
Order of Malta என்ற அனைத்துலக பிறரன்பு அமைப்பு திருத்தந்தையின் அங்கீகாரம் பெற்றதன் 900மாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று அவ்வமைப்பின் நான்காயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இந்தப் பிறரன்பு அமைப்பு தனது 900 ஆண்டுகால வரலாற்றில் திருஅவைக்கு விசுவாசமாய் இருந்துவரும் பாதையில் தொடர்ந்து சென்று, விசுவாசத்தின் உருமாற்றும் வல்லமைக்கு உறுதியான சாட்சிகளாக வாழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கை, பிறரன்பு, பற்றுறுதி ஆகிய நற்செய்தி விழுமியங்கள் காட்டும் பாதையில் உலகிலும், சமுதாயத்திலும் தொடர்ந்து பணியாற்றுமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருத்தந்தை இவ்வமைப்பினரைச் சந்திக்கும் முன்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இவர்களுக்குத் திருப்பலி நிகழ்த்தினார். 1113ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி திருத்தந்தை 2ம் பாஸ்கால், "Piae postulatio voluntatis" என்ற அறிக்கையின் மூலம் இந்த அமைப்பின் ஆன்மீக மற்றும் இறையாண்மையின் தனித்துவத்தை ஏற்று அதனை, திருப்பீடத்தின் பாதுகாவலில் வைத்தார்.
13,500 உறுப்பினர்கள், 80,000 தன்னார்வப் பணியாளர்கள், 25,000க்கு மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர் மற்றும் நலப்பணியாளர்களின் ஆதரவுடன் 120 நாடுகளில் மருத்துவ, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகின்றது இவ்வமைப்பு.
Order of Malta அமைப்பு பெத்லகேமில் நடத்தும் மருத்துவமனையில் 1990ம் ஆண்டிலிருந்து 57,000க்கு மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. சிரியா, துருக்கி, லெபனன் ஆகிய நாடுகளில் 10,000க்கு மேற்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளையும் இவ்வமைப்பு வழங்கி வருகிறது.







All the contents on this site are copyrighted ©.