2013-02-09 15:54:07

கட்டாய வேலைமுறை ஒழிக்கப்படுவதற்குக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு ILO வலியுறுத்தல்


பிப்.09,2013. உலக அளவில் கட்டாய வேலையினால் 2 கோடியே 10 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளவேளை, இந்த வேலைமுறையை முற்றிலும் ஒழிப்பதற்குத் தீவிர முயற்சிகள் எடுக்கப்படுமாறு ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கை வலியுறுத்துகிறது.
வரும் வாரத்தில் ஜெனீவாவில், கட்டாயவேலை குறித்து அனைத்துலக கூட்டம் ஒன்று தொடங்கவிருப்பதை முன்னிட்டு புதிய அறிக்கை ஒன்றை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள ஐ.நாவின் ILO நிறுவனம், இந்த மாதிரி வேலையில் சேர்க்கப்படும் மக்கள், கடனுக்காகக் கொத்தடிமைகளாகவும், பாலியல் வியாபாரத்திலும் பயன்படுத்தப்படுகின்றனர் எனக் கூறியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட 55 இலட்சம் சிறார் கட்டாயவேலைக்கு உட்படுத்தப்படுகின்றனர், இவர்கள், உலக அளவில் கட்டாய வேலை செய்வோரில் ஏறக்குறைய 26 விழுக்காட்டினர் என்றும், ஏறக்குறைய 45 இலட்சம் பேர் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர், இவர்கள், உலக அளவில் கட்டாய வேலை செய்வோரில் 21 விழுக்காட்டினர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
15க்கும் 24 வயதுக்கும் உட்பட்ட ஏறக்குறைய 7 கோடியே 40 இலட்சம் இளையோர் வேலையின்றி உள்ளனர் எனவும் ILO நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.