2013-02-08 16:03:55

மனித வியாபாரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு பிரிட்டன் ஆயர்கள் அழைப்பு


பிப்.08,2013. ஆப்ரிக்க அடிமைச் சிறுமியாகிய புனித Josephine Bakhitaவின் திருவிழாவான இவ்வெள்ளியன்று, மனித வியாபாரங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் செபிக்குமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்கள் கேட்டுள்ளனர்.
சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுத வியாபாரத்துக்கு அடுத்தபடியாக, உலகில் அதிக அளவில் இலாபம் சேர்த்துக் கொடுக்கும் பெருங்குற்றம் மனித வியாபாரம் என்று கூறிய ஆயர்கள், திருஅவையில், குறிப்பாக, பெண் துறவிகளின் முயற்சியினால் மனித வியாபாரம் குறித்த விழிப்புணர்வு அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் இந்நடவடிக்கை குறித்து வத்திக்கான் வானொலியில் பேசிய, அப்பேரவைத் தலைவர் Westminster பேராயர் Vincent Nichols, அடிமைத்தனத்தின் நவீன வடிவமாகிய மனித வியாபாரத்துக்கு எதிரானப் போராட்டத்தில் திருஅவை முக்கிய அங்கம் வகிக்கின்றது என, காவல்துறை கருதுகின்றது என்று தெரிவித்தார்.
சூடான் நாட்டைச் சேர்ந்த புனித Josephine Bakhita, 9 வயதில் கடத்தப்பட்டு அடிமையாக விற்கப்பட்டவர். அவரின் 35வது வயதில் இத்தாலிய தூதரக அதிகாரியால் வாங்கப்பட்டு இத்தாலிக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் கத்தோலிக்கத்தைத் தழுவி, கனோசியன் துறவு சபையில் 1896ம் ஆண்டில் சேர்ந்தார். 50 வருடங்கள் எளிய செப தப வாழ்வை மேற்கொண்டு 1947ம் ஆண்டில் இறந்தார். 2000மாம் ஆண்டு அக்டோபரில் புனிதர் என அறிவிக்கப்பட்டார் அருள்சகோதரி Josephine Bakhita.







All the contents on this site are copyrighted ©.